திருவண்ணாமலை

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆவார் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதி

திருவண்ணாமலை

தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி தான் அமையும். எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதிபட தெரிவித்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சுராபாத் ஊராட்சியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட ஆவின் தலைவரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். முன்னதாக ஒன்றிய கழக செயலாளர் பி.ராகவன் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நிறைவேற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கின்றனர். கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் சேர படித்த இளைஞர்கள் அதிக அளவில் வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. படித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே கழகத்திற்கு அமோக ஆதரவு இருக்கிறது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலின்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள் அம்மா அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடுதோறும் சென்று எடுத்துக்கூறி கழகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிக அளவில் சட்டமன்ற தொகுதிகளை கழகம் வென்றெடுக்கும். அது மட்டுமல்லாது தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அம்மாவின் அரசு அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

முன்னதாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கும் மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.