தற்போதைய செய்திகள்

126 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.21 கோடி கடனுதவி – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட கொட்டையூர், ஆலங்குடி, மேலஅமராவதி, சித்தன்வாழூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 126 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான வங்கிகடனுதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறார்.

அதனடிப்படையில், கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் மட்டுமே திருவாரூர் மாவட்டத்தில் 9873 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் சுழல் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களும் ரூ.972 கோடியே 764 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இங்கு திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட கொட்டையூர், நார்த்தாங்குடி, பாப்பாகுடி, அரவூர், மாணிக்கமங்கலம், ஆலங்குடி, பூந்தோட்டம், தென்குவளவேலி, பூனாயிருப்பு, சாரநத்தம், திருவோணமங்கலம், பாடகச்சேரி, மாத்தூர், பெருங்குடி, புளியக்குடி, சித்தன்வாழுர், கண்டியூர், கீழவிடையல், மேலவிடையல், தொழுவூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 126 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான வங்கிகடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்வில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால், வலங்கைமான் ஒன்றிய குழு தலைவர் கே.சங்கர், நீடாமங்கலம் பால் வழங்கும் சங்கத்தின் தலைவர் யு.இளவரசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் கே.வாசுதேவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.