சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் ரூ.10,055 கோடி முதலீடு – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில்  தலைமைச்செயலகத்தில், தொழில்துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,055 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டங்களின் மூலம், சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச்செய்திடவும் முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் பயனாக, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2020ம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று முதலமைச்சர் எடப்பாடிே கே.பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. தற்போது நிலவி வரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 14 திட்டங்களில், 4 திட்டங்களுக்கு காணொலிக்காட்சி மூலமாகவும், 10 திட்டங்களுக்கு நேரடியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

காணொலிக் காட்சிகள் மூலமாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வருமாறு:-

தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், 6300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், JSW Renewable Energy நிறுவனத்தின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த Mantra Data Centres நிறுவனம், சென்னைக்கு அருகில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

Aosheng Hitech Limited நிறுவனம், 200 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கார்பன் ஃபைபர் தகடுகள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த Vans Chemistry நிறுவனம், 50 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 750 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்கழிவு மேலாண்மை வசதி, மறுசுழற்சி மற்றும் விலை மதிப்புமிக்க உலோகங்களை சுத்திகரித்தல் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

நேரடியாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் வருமாறு:-

காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், Apollo Tyres நிறுவனம், 505 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 300 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், டயர்கள் உற்பத்தி விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் Hiranandani குழுமத்தை சேர்ந்த Greenbase Industrial Parks நிறுவனம், 750 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Industrial Logistics Park அமைத்திடும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த TPI Composites நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Wind Blades உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்நிறுவனம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இப்பொழுது இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

Li-Energy நிறுவனம், 300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 325 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சார வாகனங்களுக்கான மின்கலன் பொதிகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திருவள்ளூர் மாவட்டத்தில், தென்கொரிய நாட்டைச் சேர்ந்த LS Automotive Pvt. Ltd நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மோட்டார் வாகனங்களுக்கான (EV battery packs) உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், Britannia நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Biscuits தயாரிக்கும் விரிவாக்கத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்நிறுவனம், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டது. இப்பொழுது இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் Inox Air Products நிறுவனம், 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 105 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Liquid Oxygen உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்த நிறுவனம் கோவிட் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், தென்கொரிய நாட்டை சேர்ந்த Hyundai Wia நிறுவனம், 109 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 50 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சென்னை, அம்பத்தூரில்,Grinn Tech Motors & Services நிறுவனம், 90 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Battery and BMS உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் Counter Measures Technologies நிறுவனம், 51 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்கள் உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

இந்த திட்டம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருந்தடத்தில் அமையவுள்ளது என மொத்தம், 14 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 10,055 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச்செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் நீரஜ்மித்தல், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.