மதுரை

தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்தது தான் தி.மு.க.வின் சாதனை – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கடும் தாக்கு

மதுரை

தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்தது தான் தி.மு.க.வின் சாதனையாக இருக்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறினார்.

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 56-வது வார்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் திட்டத்தினை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.

பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது;-

நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம், ஏனென்றால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை, சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது, நூற்றுக்கு நூறு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம். இதே திமுக ஆட்சிக்காலத்தில் எப்படி இருந்தது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் சாதனைகளை கூறி வாக்குகள் கேட்போம். ஆனால் திமுக எதை சொல்லி வாக்குகள் கேட்கப் போகிறது.

இன்றைக்கு விவசாயிகளின் பாதுகாவலராக முதலமைச்சர் திகழ்கிறார் அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார் ஆனால் திடீரென்று ஸ்டாலின் விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் பல்வேறு பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

முல்லைப் பெரியாறு, காவேரி போன்றவற்றில் தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகளில் தங்களின் சுயநலத்திற்காக உரிமையை பறிகொடுத்து விவசாயி வயிற்றில் அடித்தது தான் திமுக அவர்களுக்கு துரோகம் செய்ததுதான் தி.மு.க.வின் சாதனையாக இருக்கும் இதனை விவசாயிகள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். ஆனால் முல்லைப் பெரியாறு, காவேரி போன்றவற்றில் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி இழந்த உரிமையை மீட்டுத் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா தொடர்ந்து இந்த உரிமைகளை நமது முதல்வரும் துணை முதல்வரும் காத்து வருகின்றனர்.

முதலமைச்சர் வயக்காட்டில் இறங்கி நாற்று நட்டார் ஆனால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் ஸ்டாலினும் வயக்காட்டில் நடந்தார். ஆனால் விவசாயிகள் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதி இல்லாதவர் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.