தமிழகம் தற்போதைய செய்திகள்

ரூ.13 கோடியில் விரைவில் தாழங்குடா கிராமத்தில் புதிய மீன் இறங்குதளம் – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

கடலூர் மாவட்டம்,தாழங்குடா கிராமத்தில் ரூ.13 கோடியில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடலூர் மாவட்டம்,தென்பெண்ணை ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தாழங்குடா கிராமத்தில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு மிகவும் பாதிப்படைந்துள்ளது.தென்பெண்ணையாற்று முகத்துவாரம் மணல் திட்டுகளால் அடைபட்டுள்ளதால் புயல் காலங்களில் மீன்பிடி படகுகளை ஆற்றுக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் படகுகள் சேதமடைவதால் தென்பெண்ணையாற்று முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைத்து தரவும்,இப்பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பினை தடுத்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன இப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இதனை நிறைவேற்றும் விதமாக 2020-21 நிதியாண்டில் கடலூர் மாவட்டம்,தாழங்குடா கிராமத்தில் ரூ 13.06 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்புப் பணி மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வள மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தற்போது,தமிழக அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையிலுள்ளன.இப்பணிகள் நிறைவேற்றப்படுவதால் கடல் அரிப்பு தடுக்கப்பட்டு தாழங்குடா கிராமம் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு,மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் வழிவகை ஏற்படும்.இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.