தூத்துக்குடிக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தலைமையில் வடக்கு&தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு

தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு இன்று வருகை தரும் முதலமைச்சருக்கு தமிழகமே வியக்கும் வகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.
இன்று 13-ந்தேதி ஆய்வுசெய்ய தூத்துக்குடிக்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வரவேற்பு அளிப்பது குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் தமிழக மக்களின் நலன்காக்க இரவு பகல் பாராது தன்னலம் கருதாமல் 24, மணி நேரமும் அரும்பாடுபட்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கழகத்தின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆய்வு கூட்டத்திற்கு வருவதோடு மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதோடு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
முன்பெல்லாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து மருத்துவ வசதிகள் இருந்தது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சென்னை சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுவரும் சூழ்நிலை இருந்து வந்தது.
தற்போது புற்று நோயினால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடியில் கேன்சர் பரிசோதனை செய்யும் மருத்துவக் கருவிகள் அமைத்து அதற்கான சிகிச்சை பெறும் வசதிகளையும், அதற்கென ரூ.17 கோடியில் கட்டிடமும் என ஆக மொத்தம் ரூ.40 கோடியில் இத்திட்டத்திற்கான சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார்.
இப்படி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக செய்துவரும் ஒரு அரசாக அம்மாவின் அரசு இருந்து வருகிறது. 2021ல் மீண்டும் முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி தான் வர வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பாக அமையும்.கழகத்தின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தமிழகமே வியக்கும் அளவில் அரசு விதிமுறைக்குட்பட்டு பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.