சிறப்பு செய்திகள்

உயிர்சேதம்-பொருட்சேதம் ஏற்படாமல் தடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அனைத்து துறையினக்கும், முதலமைச்சர் உத்தரவு

சென்னை

வடகிழக்கு பருவமழை காலத்தில் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாம் வாரத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தொடர்புடைய துறைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே, முதலமைச்சரின் உத்தரவுப்படி தலைமை செயலாளர் க.சண்முகம், தலைமையில் 18.9.2020 அன்று வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆயத்த நிலை குறித்து சம்மந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்களுடன் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் ஆயத்த பணிகளை நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய 4,133 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14,232 பெண்கள் உள்ளிட்ட 43,409 எண்ணிக்கையிலான முதல்நிலை மீட்பாளர்கள், தயார் நிலையில் உள்ளனர். கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல் நிலை மீட்பாளர்களும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினரிடம் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் மற்றும் 691 ஊர்காவல் படையினர் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களுக்கும் 9,859 பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளாக 6,016 தடுப்பணைகள் கட்டப்பட்டு 11,482 கசிவுநீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 7,299 ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகள் நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 4,154 கிலோ மீட்டர் நீளம் ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 9,616 ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 7,989 ஆக்கிரமிப்புகள் நீர்நிலைகளிலிருந்து அகற்றப் பட்டுள்ளன. 7.53 கோடி கன மீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டு, 6,70,864 விவசாயிகள் இதனால் பயன்பெற்றனர். இதனால் 2.55 TMC கூடுதல் நீரினை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 11,387 பாலங்கள் மற்றும் 1,09,808 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பு உள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், மாவட்டங்களில் 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 JCB இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 அதிக திறன் கொண்ட பம்புகள், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. இயற்கை பேரிடர்களின் காரணமாக எழும் சிக்கல்களை தீர்க்கவும், குறிப்பாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மின்கம்பங்களை இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), TNSMART செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பருவமழை காலத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறை அலுவலர்களின் செயல் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களில் நடத்தப்படும் மாதிரி பயிற்சிகள், கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றி, 50 பேருக்கு மிகாமல் பயிற்சி அளிக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போதும், பொது இடத்தில் தங்க வைக்கும் போதும், முகக்கவசம் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும்.

தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிவாரண முகாம்கள், சமூக இடைவெளியுடன் தங்க வைக்க போதுமானதாக உள்ளதா என ஆய்வு செய்து, தேவைப்படின் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் Bleaching powder,, மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், போதுமான அளவு மருந்துகள் இருப்புடன், தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், மருத்துவமனையிலுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ஜெனரேட்டர்களை உயரமான இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள், நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில், பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் உயிர்சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க, அனைத்து துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.