தற்போதைய செய்திகள்

தன்னிறைவு பெற்ற தொகுதியாக ஜோலார்பேட்டை மாற்றம் – அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதம்

வேலூர்

ஜோலார்பேட்டை தன்னிறவைு பெற்ற தொகுதியாக மாற்றப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதத்துடன் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை சட்டமன்றத் தொகுதி சோலையார்பேட்டை மேற்கு ஒன்றியம்
புதுப்பேட்டை, திரியாலம் சோமநாயக்கன்பட்டி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில்
ஒன்றிய கழக செயலாளர் எம்.கே.வெள்ளையன் தலைமையில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்கள் மற்றும் விபர கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர் முன்னிலை வகித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்கள் மற்றும் விபர கையேடுகளை வழங்கி பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறாக தி.மு.க. இன்று கருணாநிதியின் குடும்ப கட்சியாக மாறி விட்டது. அப்பா, மகன், மகள், பேரன், கொள்ளுப்பேரன் என குடும்ப வாரிசு அரசியல் திமுகவில் உள்ளது. ஆனால் கழகம் என்ற பேரியக்கத்தில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. கழகம் தொண்டர்களின் கட்சி. மக்களுக்காகவே பாடுபடுகின்ற இயக்கம் கழகம் மட்டும்தான். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பிறகு தமிழகத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக உள்ளார்.

கழகத்தில் மட்டும்தான் சாதாரண தொண்டன் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என உயர்ந்த பதவிகளுக்கு வர முடியும். திமுகவில் அவ்வாறு வர முடியாது. கருணாநிதியின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் தான் உயர்ந்த பதவிகளுக்கு வர முடியும்.

இளைஞர்களின் எதிர்காலத்தை சிந்திக்கின்ற இயக்கமாக கழகம் திகழ்கிறது. கழகம் என்றும் இளைஞர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ரூ.299 கோடி செலவில் திருப்பத்தூர் முதல் வாணியம்பாடி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு விரைவில் நான்கு வழி சாலையாக மாற உள்ளது. ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக விளங்குகிறது. எங்கு பார்த்தாலும் சாலைகள், பாலங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

விரைவில் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவேரி குடிநீர் வழங்க ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏழை, எளியவர்கள் பயன்பெற வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் கோ.ம.புஷ்பநாதன், மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ரமேஷ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேவன், மாவட்ட இளைஞர் பாசறை இளம்பண்கள் பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகேந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் தனஞ்செயன், ஏலகிரி எம்.ரகு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.