தமிழகம் தற்போதைய செய்திகள்

அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை

கோவை

தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயிக்கும் கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுரை வழங்கியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை மருத்துவர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் முதலமைச்சரின் உத்தரவின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பரிசோதனைகள் அதிகளவில் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடுதான். அதிலும் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 7000 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டமானது தமிழ்நாட்டின் முக்கியமானதொரு மருத்துவ மையமாக திகழ்ந்து வருகின்றது. கோயம்புத்தூர் மட்டுமல்லாது, அண்டை மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்தும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஏராளமானோர் தினந்தோறும் வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று போன்ற பேரிடர் காலங்களில் தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை தாமதமின்றி வழங்குவதுடன், அரசு நிர்ணயித்த கட்டணங்களை மட்டும் பெற வேண்டும்.

அதுபோலவே, தனியார் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகளை தாமதமின்றி வெளியிட வேண்டும். அவற்றில் குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். விரைவாக அவர்களின் தொடர்பு விவரத்தினை மாவட்ட நிர்வாகம், மற்றும் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கென்று அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரநாயர், மாநகராட்சி ஆணையாளர் பெ.குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ரூபன்சங்கர் ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் ரமேஷ்குமார், தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.