சிறப்பு செய்திகள்

முதலமைச்சரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார் – அமைச்சர்கள்,கழகத்தினர், பொதுமக்கள் இறுதி அஞ்சலி

சேலம்

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவுசாயியம்மாள்(வயது93). வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் நான்கு ரோடு அருகே உள்ள லண்டன் ஆர்த்தோ என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திங்கள் இரவு 12.15 மணியளவில் அவர் மாரடைப்பால் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள முதலமைச்சரின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

தாயார் இறந்ததை அறிந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கார் மூலம் அதிகாலை சிலுவம்பாளையம் வந்து சேர்ந்தார். பிறகு அவர் தாயாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் ச.இராமதாசு, திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் ஆகியோர் தொலைபேசி மூலமாக முதலமைச்சரை தொடர்பு கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்து, ஆறுதல் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,

வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேரில் சென்று தவுசாயம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, முதலமைச்சருக்கு ஆறுதல் கூறினர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ராஜேஷ்தாஸ், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆகியோர் நேரில் சென்று தவுசாயம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வீட்டில் முறைப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டு  காலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் சிலுவம்பாளையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டிற்கு திறந்த வேனில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இந்த இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள், கழகத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க பங்கேற்றனர். பின்னர் சிலுவம்பாளையம் ஊர் பொது சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், கிராம மக்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தவுசாயம்மாளுக்கு விஜயலட்சுமி என்ற மகளும், கோவிந்தராஜ், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.