தற்போதைய செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா தடுப்பு பணி – மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், தலைமையில் ஆய்வு

சென்னை

மீனவ சங்க நிர்வாகிகள் சார்பில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்து வரும் மீனவர்களின் கால முறை நேரத்தை மாற்றம் செய்ய வலியுறுத்தி வழங்கப்பட்ட கோரிக்கை மனுவை ஏற்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மீன்வளத்துறை இயக்குனர் டாக்டர் சமீரன், காவல்துறை கூடுதல் ஆணையர் அருண், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரது தலைமையில் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நேற்று காசிமேடு பகுதியில் நடைபெற்றது. இதனைத்தொடந்து காசிமேடு ஏல விற்பனை பகுதி, மீன்பிடி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை சந்தை மூடப்பட்டது. பின்னர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மீன் விற்பனை செய்ய தளர்வு அளிக்கப்பட்டது.

சென்னை காசிமேடு பகுதியில் சுமார் 30.000 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருவதால் மீன் தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து விற்பனையை தொடங்கி வருகின்றனர். இதனிடையே மீனவர்கள் மீன் விற்பனை செய்ய கால நெறிமுறை நேரத்தை மாற்றி தர வலியுறுத்தி காசிமேடு பகுதி மீனவர் சங்க பிரதிநிதிகள் கொடுத்த கோரிக்கை மனுவினை ஏற்று ஆய்வு செய்ததில் சென்னையை சேர்ந்த அனைத்து மீனவ பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து கலந்து ஆலோசனை செய்த பின் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பின் முடிவு செய்யப்படும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மீனவர்கள் சமூக விதிகளை பின்பற்றி அரசின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது இணை ஆணையர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் க.சுப்புலட்சுமி, உதவி ஆணையாளர்கள் அனந்த குமார், தினகரன், மற்றும் மீன்பிடி துறை, மாநகராட்சி அதிகாரிகள், மீன்பிடி சங்கத்தினர், விசை படகு உரிமையாளர்கள், விற்பனை சங்கத்தினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.