சிறப்பு செய்திகள்

தாயார் பிரிவால் வாடும் அன்புச் சகோதரர் முதல்வருக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை – துணை முதலமைச்சர் இரங்கல்

சென்னை,

தாயார் பிரிவால் வாடும் அன்புச் சகோதரருக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் அன்புத் தாயார் தவுசாயம்மாள் தனது 93-வது வயதில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருத்தமுற்றேன்.

ெபற்றெடுத்து, பேணி வளர்த்து, சான்றோனாய் உயரச் செய்த அன்புத் தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்புச் சகோதரர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை. தாயன்புக்கு நிகர் என்ன இருக்க முடியும்?

பாசமிகு தாயார் தவுசாயம்மாளை பிரிந்து வாடும் அன்புச் சகோதரர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அவர் தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், குடும்ப நண்பர்களுக்கும் எனது சார்பிலும், கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த தாயார் தவுசாயம்மாளின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். அன்னை தவுசாயம்மாளின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.