தற்போதைய செய்திகள்

ரூ.1.22 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை

தருமபுரி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பந்தாரஅள்ளியில் புதிய சமுதாய கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் அமைத்தல் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் இருமத்தூர் ஊராட்சி டொக்கம்பட்டியில் புதிய தார்சாலை அமைத்தல் என 2 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன், பூமி பூஜை செய்து வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் ஆணைப்படி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டம் 2019-20-ம் ஆண்டின் கீழ் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பந்தாரஅள்ளி கிராமத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில், புதியசமுதாய கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டும் பணி, மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் 2020-21 இருமத்தூர் ஊராட்சி டொக்கம்பட்டியில் கைகாலான்குட்டை ரோடு முதல் கொல்லாபுரி மாரியம்மன்கோவில் வரை ரூ.46.69 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி, உள்ளிட்ட 2 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக அரசு கடைகோடி மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களையும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளையும் பின்பற்றி கொரோனா தொற்றை தடுக்க வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிப்பது, அவசியம் முகக்கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.