தற்போதைய செய்திகள்

மாலைநேர மருத்துவ முகாம் மூலம் 1107 பேர் பயன் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட மாலை நேர மருத்துவ முகாம்களில் 1107 நபர்கள் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது;-

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் தொற்று பாதித்த நபர்களை உடனடியாக கண்டறிய சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி 11.10.2020 வரை 58,493 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 30 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், முதலமைச்சர் உத்தரவின்படி மாலை 3 மணி முதல் 5 மணிவரை மற்றும் 6 மணிமுதல் 8 மணிவரை மண்டலத்திற்கு 2 மருத்துவ முகாம்கள் என பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் 30 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மேலும் மாநகராட்சியின் 36 மருத்துவமனைகளில் மாலை 5 மணிமுதல் 8 மணிவரை சிறப்பு மாலை நேர மருத்துவ முகாம்கள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் 10.10.2020 முதல் இதுவரை 1107 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் (Sero Survey) கொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மக்களிடையே கண்டறிய 12,460 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போது வரை 1,82,014 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1,64,848 நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 13,751 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 11.10.2020 அன்று வரை 15,74,334 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெருநகர சென்னை மாநகராட்சி களப்பணி மூலம் சேகரிக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 7,93,766. இவை ஒரு மில்லியனுக்கான சோதனையில் 1,91,601 ஆகும்.

அரசு தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை பின்பற்றாத தனிநபர்களிடமிருந்து அபராதம், நிறுவனங்களின்மீது அபராதத்துடன் கூடிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது 01.04.2020 முதல் 10.10.2020 வரை ரூ2.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.