தற்போதைய செய்திகள்

மக்கள் போற்றும் எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்குவோம் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சூளுரை

தூத்துக்குடி

தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து மக்கள் போற்றும் எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்குவோம் என்று ஒன்றிய செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கயத்தார், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கருங்குளம் பகுதிகளின் ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் கடம்பூர் சிதம்பரத்திலுள்ள அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வாரி வழங்கி வருகின்றனர். தற்போது மக்கள் போற்றும் மகத்தான முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வினர் மக்களை திசைதிருப்பும் வகையில் பல்வேறு பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து வருகிறார்கள். அவற்றையெல்லாம் முறியடிக்கும் விதத்தில் கழகத்தின் ஒன்றிய செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து கழக செயல்வீரர்களுடன் ஒவ்வொரு வீடாக சென்று அம்மாவின் நல்லாட்சி மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் திட்டங்களான அம்மா மினி கிளினிக்,

அம்மா நகரும் நியாய விலைக்கடைகள், குடிமராமத்து திட்டம், தைபொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் ஆகிய திட்டங்களையும், புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி மூலம் செய்திட்ட சாதனைகளை மக்களிடம் கழகத்தினர் எடுத்துக்கூறி இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். இதன் மூலம் கழகம் மாபெரும் வெற்றியை பெற்று 2021ல் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கிட நாம் அனைவரும் இரவு பகல் பாராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்