தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் ரூ.1029 கோடியில் அழகுற சீரமைப்பு – பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

திருப்பூர்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதிகள ரூ.1029 கோடியில் அழகுற சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்டரங்கில், நேற்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிடுக்கான நகரம் திட்டத்தின் (ஸ்மார்ட் சிட்டி) கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். மேலும், நமது மாவட்டத்திலுள்ள மாநகராட்சி , நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியின் வளர்ச்சிக்காக விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டம், திறந்தவெளி காலியிடம் மேம்பாடு செய்தல், ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம், எல்.இ.டி. தெருவிளக்குகள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைத்தல்,

தினசரி மற்றும் வாரச்சந்தை மேம்படுத்துதல் மற்றும் பூ மற்றும் மீன் மார்க்கெட் மேம்படுத்துதல், ஓடைகள் மேம்பாடு செய்தல் சாலை மேம்படுத்துதல், சங்கிலிப்பள்ளம் ஓடை ஓரமாக தாராபுரம் சாலை முதல் நொய்யல் ஆற்றின் தெற்கு கரையோரம் வரை மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு திருப்பூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்து அதற்காக சீர்மிகு நகர திட்டத்தின் படி ரூ.1029.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாக முடித்திட வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடாந்து, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகள் குறித்தும் அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், மாநகர பொறியாளர் ரவி, உதவி திட்ட மேலாளர் (கணினி) சௌதாமணி, மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், திருப்பூர் தொழில்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.