தற்போதைய செய்திகள்

மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 26-ந்தேதி கடைசி நாள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

மீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் 26-ந்தேதி கடைசி நாள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உறுப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை மீன்வள அறிவியல், நான்கு இளநிலை தொழில் நுட்பவியல் நான்கு இளநிலை தொழில்சார் படிப்பு மற்றும் ஒரு இளநிலை வணிக நிர்வாகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் மேல்நிலை (10, +2) அல்லது அதற்கு இணையான மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாண்டிற்கான சேர்க்கை இணையதள வாயிலாக நடைபெற உள்ளது.

இது சம்மந்தமாக இணைய தள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.10.2020. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் 29.10.2020 அன்று வெளியிடப்படவுள்ளது. மீனவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவின் கீழ் இளநிலை மீன்வள அறிவியலில் ஆறு
இடங்களும் இளநிலை மீன்வளப் பொறியியலில் இரண்டு இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இது பற்றிய மேலும் தகவலறிய அருகிலுள்ள மீன்வளப்பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அல்லது மையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தேவையான விபரங்களை பெற www.tnjfu.ac.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். மேலும் விபரம் அறிய 04365-256430 என்ற தொலைபேசியிலோ அல்லது 9442601908 என்ற செல்லிடை பேசியிலோ தொடர்பு
கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.