அரியலூர்

அரியலூர் அல்லிநகரம் ஓடை அணைக்கட்டு நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி – அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் துவக்கி வைத்தார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் தனியார் சிமெண்ட் நிறுவன மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் அல்லிநகரம் ஓடை அணைக்கட்டிலிருந்து அரசநிலையிட்டா ஏரி, குறிஞ்சான் குளம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தலைமையில் நேற்று துவக்கி வைத்தார்.

இதன்பின்னர் அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி, பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, நகராட்சி பகுதிகளில் உள்ள அரசநிலையிட்டா, குறிஞ்சான்குளம் ஏரிகளில் அல்லிநகரம் ஓடை அணைக்கட்டிலிருந்து வரத்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதற்கு ஏரிகளில் தூர் வாரும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

அல்லிநகரம் ஓடை அணைக்கட்டானது 27.25 மீட்டர் நீளமும், 1.20 மீட்டர் உயரமும் உடையது. தலைமதகிலிருந்து வாய்காலுக்கு அதிகபட்சமாக 207.62 கனஅடி நீர் செல்கிறது. இதில் வரத்துவாய்க்கால் 1785 மீட்டர் நீளமும், 3.00 மீட்டர் அகலமும் உடையது. வரத்துவாய்க்கால் மூலம் அதிகபட்சமாக 132.77 கனஅடி நீர் எடுத்து செல்கிறது. மேலும், அரசநிலையிட்டா ஏரி மற்றும் குறிஞ்சான் குளம் ஏரியின் கரை 1635 மீ நீளமும், 18.40 மீட்டர் உபரிநீர் வழிநீர் வழிந்தோடி செல்கிறது. ஏரியின் கொள்ளளவு 9.43 மி. கனஅடியும், பரப்பளவு 21.53 ஹெக்டேரும் உடையது. இதன் மூலம் 122 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இப்பணிகள் விரைந்து முடிக்க சம்மந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில் பெரிய ஏரியின் கரை பகுதிகளில் சுற்றிலும் ஊராட்சி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்வை அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தலைமையில் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.ஆர்.சீனிவாசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், கோட்டாட்சியர் ஜோதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, நகராட்சி ஆணையர் குமரன், வட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.