தற்போதைய செய்திகள்

கரூர் ஒன்றியத்தில் ரூ.6 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜை

கரூர்

கரூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட நாவல்நகர், பெரியவடுகப்பட்டி, மாங்காசோளிப்பாளையம், செல்லரப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி, ஆத்தூர், துண்டுபெருமாள்பாளையம் பகுதிகளிலும், மண்மங்கலம் ஊராட்சிக்குபட்ட மண்மங்கலம், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளிலும், காதாப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பெரிச்சிபாளையத்திலும் ரூ.604.44 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், நல்லாட்சி நடத்திவரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி நாவல்நகரில் 3-வது கிராஸ் சாலை முதல் 9-வது கிராஸ் வரை ரூ.20.13 லட்சம் மதிப்பிலும், பெரியவடுகப்பட்டி முதல் மாங்காசோளிபாளையம் வரை ரூ.40.93 லட்சம் மதிப்பிலும், ஆசி நகர் முதல் சின்னவடுகப்பட்டி வரை ரூ.19.50 லட்சம் மதிப்பிலும், சின்ன வடுகப்பட்டி முதல் மாங்காசோளிபாளையம் வரை ரூ.8.61 லட்சம் மதிப்பிலும், செல்லரப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி முதல் நத்தமேடு வரை ரூ.17.10 லட்சம் மதிப்பிலும், துண்டு பெருமாள்பாளையம் முதல் பாலமாபுரம் சாலை வரை ரூ.19.45 லட்சம் மதிப்பிலும், மண்மங்கலம் ஊராட்சி சமத்துவபுரம் சாலை பலப்படுத்தும் பணி ரூ.25.80 லட்சம் மதிப்பிலும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது,

அதுமட்டுமல்லாது பொதுமக்களின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்திடும் வகையில், ஆத்தூர் ஊராட்சியில் புதியதாக 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து 1,888 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்கிடும் பணி ரூ.170.79 லட்சம் மதிப்பிலும், மண்மங்கலம் ஊராட்சியில் ராமேஸ்வரப்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு செம்மடையில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து புதிய மின்மோட்டார் பொருத்தி பைப்லைன் விஸ்தரிப்பு செய்து 1,729 வீடுகளுக்கு தனிநபர் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி ரூ.250.49 லட்சம் மதிப்பிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவரின் வீடுகளுக்கே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி முழுமையடையும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ந.முத்துகுமார், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், க.தங்கமணி, சத்யா, மண்மங்கலம் வட்டாட்சியர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ம.பரமேஸ்வரன், ஜெ.விஜயலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.