சிறப்பு செய்திகள்

புள்ளி விபரத்துடன் தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்

சென்னை

திமுக ஆட்சியில் எந்த பணியும் முழுமையாக நடக்கவில்லை என்றும் சென்னையில் கழக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் குறித்து ஆதாரத்துடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக இன்றையதினம் (நேற்று) இங்கு வந்துள்ளேன். நாளை (இன்று) முதல் தமிழகம் முழுவதும் கழகத்தின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் மேயர், திமுக சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் பத்திரிகையில் அறிக்கை வாயிலாக முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது நிறைய பாலங்களை கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் பல்வேறு திட்டங்களை சென்னை மாநகரத்தில் செய்திருக்கிறார் என்ற செய்திகளை தெரிவித்து, அவையெல்லாம் தெரியாமல் முதலமைச்சர் பேசியிருக்கிறார். முதலமைச்சருக்கு சென்னையில் ஏதும் தெரியாததென்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கின்றேன்.

நெடுஞ்சாலைத் துறை மூலமாக அவர்கள் ஆரம்பித்து விட்டுச் சென்ற, சென்னை மாநகராட்சியின் போரூரில் பாலம் கட்டுவதற்கு தேவையான இடம் கையகப்படுத்தப்படவில்லை, அவசர கோலத்தில் அடிக்கல் நாட்டி அந்தப் பணியை
ஆரம்பித்து விட்டார்கள். அதன் பிறகு, அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. அம்மா அவர்கள் தலைமையில் ஆட்சி மலர்ந்த பிறகு, நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், போரூர் பாலத்திற்குத் தேவையான இடத்தை கையகப்படுத்தும்போது, நீதிமன்றத்திற்குச் சென்று விட்டார்கள். ஏறத்தாழ 3 ஆண்டு காலம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, அந்த வழக்கின் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வரப் பெற்று, சில நிலத்தின் உரிமையாளர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, நிலத்தைப் பெற்று பிறகு தான் அந்தப் பாலத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.

அதுமட்டுமல்ல, அந்தப் பாலம் கட்டுகிற இடத்தில் சாலைக்கு அடியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது கூட தெரியாமல் அந்தப் பாலத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இவ்வாறு அவசர கோலத்தில் பாலம் கட்டுவதற்கு
அறிவிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, பணியும் தொடங்கி அப்படியே விட்டுச் சென்றவர்கள் தான் திமுக ஆட்சியாளர்கள். அம்மாவின் அரசுதான் அந்தப்பாலத்தை கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது.

இதுபோல, பல பாலங்கள். அதாவது, வடபழனி சந்திப்பு பாலம், எண்ணூர் முகத்துவாரப் பாலம், திருமங்கலம்- முகப்பேர் சந்திப்பு பாலம், மூலக்கடை சந்திப்பில் மேம்பாலம், வியாசர்பாடி ரயில்வே மேம்பாலம், திரு.வி.க.பாலம், அம்பத்தூர் ரயில்வே பாலம் ஆகிய பாலங்களை நாங்கள் கட்டியுள்ளோம். ஆனால், புதிதாக எந்தப் பாலமும் கழக ஆட்சியில் கட்டப்படவில்லை என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை அவர் சொல்லியிருக்கிறார். அறிக்கையின் வாயிலாக வெளியிட்டிருக்கிறார்.

பல்லாவரம் பாலம் நாங்கள்தான் கட்டினோம், நானே நேரடியாகச் சென்று திறந்து வைத்தேன். தற்போது, பல பாலங்கள் சென்னை மாநகரத்தில் கட்டப்பட்டு வருகின்றன. அவை, வேளச்சேரி சந்திப்பு, மேடவாக்கம் சந்திப்பு, கீழ்கட்டளை சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு, பெருங்களத்தூர் சந்திப்பு, ஸ்டாலின் தொகுதியில் கொளத்தூர் சந்திப்பில்
வலது பக்கம் ஆகிய பல சந்திப்புகளில் பாலங்கள் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே, கொளத்தூர் சந்திப்பில் அவர்கள் இடதுபக்கம் கட்டத் தொடங்கிய பாலத்தை நாங்கள்தான் முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளோம். இப்போது வலது பக்கம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு
பாலங்களையும் நாங்கள்தான் கட்டிக் வருகிறோம்.

அதுமட்டுமல்ல, Phase-I Outer Ring Road திமுக ஆட்சியில் 2010-ம் ஆண்டில் டெண்டர் விட்டு ஆரம்பித்தார்கள். ஆனால், அதற்குண்டான நிலத்தை கையகப்படுத்தாமலே பணியை ஆரம்பித்து விட்டார்கள். அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே நிலத்தின் உரிமையாளர், நிலத்தைக் கொடுக்க மறுத்து நீதிமன்றம் சென்று காலதாமதமாகி, பிறகு நில உரிமையாளருடன் பேசி, வழக்குகளை சந்தித்து, அரசு அந்த நிலத்தை எடுத்து, அம்மாவின் அரசுதான் அந்தத் திட்டத்தையும் நிறைவேற்றியது. அதற்காக அந்த நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வேண்டுமென்று ஆர்பிட்ரேஷன் செய்து, அது நிலுவையில் உள்ளது.

அதோடு, நான் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், Phase-I ல் வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை ஏறத்தாழ 30 கிலோ மீட்டர், Phase-I ல் நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை ஏறத்தாழ 29 கிலோ மீட்டர் தூரப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் நிறைவுபெற்று இன்னும் 10 நாட்களில் திறக்கவிருக்கிறோம். அவர்களுடைய ஆட்சியில் எந்தத் திட்டத்தையும்
முழுமையாக நிறைவேற்றவில்லை. பாதி, பாதியாக நின்றிருந்தது.

எந்தச் சாலை அமைக்க வேண்டுமென்றாலும் முதற்கட்ட பணியான நில எடுப்புப் பணியை முடித்த பிறகுதான் அந்தத் திட்டத்தையே தொடங்க வேண்டுமென்று அம்மா அவர்கள் எனக்கு ஆணையிட்டார். அதன்படி, நாங்கள் செயல்பட்டு
கொண்டிருப்பதால் தான் குறித்த காலத்தில் பல பாலப் பணிகளை நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், மாநகராட்சியில் எந்தப் பாலமும் கட்டவில்லை என்று அறிக்கையின் வாயிலாக
முன்னாள் மேயர், தற்போது சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

கத்திவாக்கத்தில் பாலம், வள்ளலார் மேம்பாலம், ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம், சென்னையில் மட்டும்
86 சிறிய பாலங்கள் கட்டி கொடுத்துள்ளோம். தற்போது 15 பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு பணிகளும் சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வருகிறது. இது தெரியாமல் முன்னாள் மேயர் அவருடைய தலைவரை திருப்திப்படுத்துவதற்காக ஒரு பொய்யான அறிக்கையை இன்று (நேற்று)
வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.