தமிழகம்

10,000 சதுர அடி குடியிருப்புகளுக்கு உள்ளாட்சிகள் மூலம் திட்ட அனுமதி – தமிழக அரசு அதிகாரம் வழங்கியது

சென்னை

10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு திட்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம் என்ற அதிகாரத்தை தமிழக அரசு அளித்துள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளின்படி சென்னை தவிர மற்ற பகுதிகளில், 7 ஆயிரம் சதுர அடி வரை மொத்த கட்டிட பரப்பு கொண்ட கட்டடங்கள், 8 வீடுகளோடு 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத கட்டடங்கள், 3 தளங்கள் அல்லது தரைதளம் மற்றும் 2 தளங்கள் கெண்ட கட்டடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே கட்டட திட்ட அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டது.

கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்தும்படி இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில் குடியிருப்புக் கட்டடத்தின் மொத்த கட்டுமான பரப்பு 10 ஆயிரம் சதுர அடி மற்றும் 8 குடியிருப்பு யூனிட்டுகள், அதே நேரம் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாமல் ஸ்டில்ட் உட்பட 4 தளங்கள் அல்லது தரைத்தளம் உட்பட 3 தளங்கள் கொண்ட கட்டடம் வரை உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்கலாம் என அரசுக்கு நகர ஊரமைப்புத் திட்டத்துறை பரிந்துரைத்தது. வணிக வளாக கட்டடங்களை பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது நகர ஊரமைப்பு திட்டத் துறையில் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த பரிந்துரையை ஏற்று சென்னை தவிர மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டட அனுமதி வழங்கும் அதிகாரத்தை தமிழக அரசு அளித்துள்ளது.