தற்போதைய செய்திகள்

112 மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை – அமைச்சர்கள் செங்கோட்டையன்- கே.பி.அன்பழகன் வழங்கினர்

தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 112 மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.அன்பழகன் ஆகியோர் வழங்கினர்.

தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தருமபுரி மாவட்ட 58 பள்ளிகள், கிருஷ்ணகிரி மாவட்ட 54 பள்ளிகள் என மொத்தம் 112 மெட்ரிகுலேசன் பள்ளிகள், சுயநிதிபள்ளிகள், உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள் தொடர் அங்கீகார ஆணையினை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.செங்கோட்டையன் மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் தந்து மாணவர்கள் கல்வி பயில வித்திட்டார். அதனைத்தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து கல்வியில் ஒரு புரட்சி ஏற்படுத்தினார். அவர்கள் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடியே 99 லட்சம் மதிப்பிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் ரூ.6700 கோடி உயர்கல்வித்துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களின் கல்வித்தரம் உயர்ந்தால்தான் அந்த நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அதன் அடிப்படையில் தான் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்க பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் பள்ளிக்கல்வியை முடித்தபிறகு அவர்கள் உயர்கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு இடங்களில் புதிய கல்லூரிகளையும், புதிய பாடப்பிரிவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப மாணவ செல்வங்களின் கல்வித்திறன் மேம்படுத்த 7200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ், 80,000 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு, 928 பள்ளிகளில் அடல் டிங்கர் லேப் ஆகியவை விரைவில் அமைக்கப்பட உள்ளது.

கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் கல்வித்தொலைக்காட்சியின் மூலம் பள்ளிப்பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது. வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கலைவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் விவரங்களை கல்வித்துறை தொலைபேசி உதவி எண் 14417-ஐ தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதன் காரணமாக மாணவர்கள் செல்வங்கள் எவ்வித தங்குதடையுமின்றி கல்வி பயில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வில் தமிழக அரசின் பாடதிட்டங்களிலிருந்து அதிக அளவில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தமிழக மாணவர்கள் எந்தவிதமான தேர்வுகளையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் வடிமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.