சிறப்பு செய்திகள்

தி.மு.க கட்சியல்ல கந்து வட்டிக்கடை – அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு

விழுப்புரம்

தி.மு.க கட்சியல்ல, கந்துவட்டிக்கடை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி உள்ளார்

விழுப்புரம் மாவட்டம் காணை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்பட்டு பகுதியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பாசறை நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான புத்தகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காணை மேற்கு ஒன்றிய செயலாளருமான முத்தமிழ்செல்வன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமதுஷெரீப், ஆவின் தலைவர் பேட்டைமுருகன், கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

நாம் மிக விரைவில்தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஆண்ட கட்சியே 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து அம்மாவின் அரசு 2 முறையாக ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு சோதனைகள், நீதிமன்ற பிரச்சினைகளை கடந்து 4 ஆண்டுகளாக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அம்மாவின் அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பொதுமக்கள் மற்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்த நல்ல எண்ணத்தை பாசறை பொறுப்பாளர்கள் வாக்குகளாக மாற்ற அரும்பாடு பட வேண்டும். இதற்கு பாசறை நிர்வாகிகள் பங்கு இல்லாமல் எந்த இயக்கமும் வளர்ச்சி அடைய முடியாது. பாசறையின் பலம் மிகவும் முக்கியம். அம்மா அவர்கள் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுகவினர் ஒரு குடும்ப கட்சி. வாரிசு இயக்கமாகும். திமுகவினர் கவர்ச்சியான திட்டங்களை கூறி மக்களை திசை திருப்புவார்கள். கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு ஆகியவை தி.மு.க. கும்பலின் முக்கிய நோக்கமாகும். திமுக ஒரு ஏஜெண்ட் அரசியல் கட்சி. தி.மு.க. கட்சியல்ல. அது கந்துவட்டிக்கடை. ஆனால் அம்மாவின் அரசோ மக்களுக்கான அரசு. உழைப்பவர்களுக்கு பதவி தரும் ஒரே இயக்கம் அதிமுக தான். இங்கு வருகை தந்துள்ள பாசறை நிர்வாகிகள் கழக ஆட்சியை 3-வது முறையாக அமைத்து எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க அரும்பாடு பட வேண்டும்.

பாசறை நிர்வாகிகள் தான் அடுத்த தலைமுறைக்கு கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும். உங்களுக்கு தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம். அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சி செய்து ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார்கள். பாரத பிரதமர் மோடி இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் தான் சிறப்பாக செயல்படுகிறது என்று அனைத்து முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் கூறி பாராட்டியுள்ளார்.

மேலும் மாணவ, மாணவிகள் கல்வியில் வளர்ச்சி அடைய 73 கலைக்கல்லூரிகளும், 5 சட்டக்கல்லூரிகள், விழுப்புர மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகத்தை வழங்கியுள்ளார்கள். அம்மா அவர்கள் கூறியதைப் போல் இளைஞர் பாசறை நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றி கழக ஆட்சியை 3-வது முறையாக அமைக்க அரும்பாடு பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ரமன், கழக நிர்வாகிகள் சண்முகம், அரங்கநாதன், நாகராஜன், ஆறுமுகம், பன்னீர், சிவபாலன், கலியன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.