தற்போதைய செய்திகள்

மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் வீட்டுமனை பட்டாக்கள் – அமைச்சர்கள் கே.சி.வீரமணி-நிலோபர்கபீல் உறுதி

வேலூர்

மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபீல் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், செண்டத்தூர் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பிலும், கொத்தூர் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 துணை சுகாதார நிலையங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர்கபீல் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் கார்கூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, குடிநீர் இணைப்பு, அடிப்படை வசதிகள் என ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை பூமிபூஜை செய்து அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். இதன்பின்னர் சிவனகிரி கிராமத்தில் 54 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, டாக்டர் நீலோபர்கபீல் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கொரோனா தடுப்பு காலத்தில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து பொது மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி, பாதுகாத்து வருகிறார். குருவிக்கு கூட தனியாக ஒரு கூடு இருக்கிறது. மனிதர்களுக்கு சொந்த வீடு இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும் என்பதை உணர்ந்த முதலமைச்சர் தமிழகம் முழுவதும் 7 லட்சம் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,769 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் வசித்து வரும் பீஞ்சமந்தை, அல்லேரி மலை, அரவட்லா பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா விரைவில் வழங்கப்படவுள்ளது.

சிவனகிரி பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான இடத்திற்கு அருகில் குடியிருந்து வந்தவர்களுக்கு வனத்துறையின் சட்டத்திட்டங்களை மாற்றி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்று 54 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

பின்னர் அமைச்சர் டாக்டர் நிலோபர்கபீல் பேசியதாவது:-

ஆண்களுக்கு இணையாக பெண்கள் முன்னேற்றமடைய, தொழில் துவங்க பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. வெளியூர் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே தங்குவதற்கு சென்னை போன்ற இடங்களில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. தனியார் வேலைவவாய்ப்பில் இளைஞர்கள் பங்கு பெற ஏதுவாக இணையதள சேவை துவக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் கொரோனா தடுப்பு காலத்தில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் சுயமாக தொழில் துவங்க பல்வேறு பயிற்சிகள் தொழிலாளர் நலத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் பேசினார்.