தற்போதைய செய்திகள்

நெகிழி கழிவுகளை பயன்படுத்தி 1599 கி.மீ தூரம் சாலைகள் அமைப்பு – சி.பொன்னையன் தகவல்

சென்னை

2011-12 முதல் 2014-15 வரை தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.218.67 கோடி நிதியின் மூலம் 1599.36 மெட்ரிக் டன் எடை கொண்ட நெகிழி கழிவுகளை பயன்படுத்தி 1599.36 கி.மீ தூரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநில கொள்கை வளர்ச்சிக்குழு துணைத்தலைவர் சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.

“நெகிழி கழிவு மேலாண்மை விதிகள் 2016”-2018ல், திருத்தம் செய்யப்பட்டது குறித்த மதிப்பீட்டாய்வுக் குழு கூட்டம்
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி.பொன்னையன் தலைமையில் நேற்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு அரங்கத்தில் காணொளி மூலம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பி.துரைராசு, அரசு கூடுதல் தலைமை செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை) ஜெயஸ்ரீ ரகுநந்தன், அரசு கூடுதல் தலைமை செயலாளர் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை) சந்தீப் சக்சேனா, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு குழுமத்தலைவர் (நிலப்பயன்பாடு) பு.செ.அர்ச்சனா கல்யாணி,
உதகமண்டலம் சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்டம் பிரிவு-1 திட்ட இயக்குநர் சரயு மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத்தலைவர் சி.பொன்னையன் பேசியதாவது:-

தமிழ்நாட்டினை நெகிழி மாசில்லா மாநிலமாக உருவாக்கிடவும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய நெகிழிகளை ஒழிக்கவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சுற்றுச்சூழல் அமைப்புகள்,தேசிய பசுமைப்படை மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டச் சுற்றுச்சூழல் குழுக் கூட்டங்கள் மற்றும் பெருந்திரள் விழிப்புணர்வு பேரணிகள் மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நெகிழி மனித உயிரை மட்டும் இல்லாமல் இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரையும் அழித்துவிடும் ஒரு கொடிய மனித கண்டுபிடிப்பு எனவும், மக்களால் பயன்படுத்தி எறியப்படும் இந்நெகிழியானது கடல் நீருக்குள் சென்று கடலில் வாழும் பல உயிரினங்களான மீன், ஆமை, திமிங்கலம் போன்றவைகளின் உயிரை பறித்து விடுகிறது.

எனவே, முடிந்தவரை நெகிழியை தவிர்த்து மாசில்லா தமிழகத்தை உருவாக்கிட அம்மா அவர்களின் வழியை பின்பற்றி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 110 விதியின் கீழ் 05.06.2018 அன்று சட்டமன்றப் பேரவையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் போன்றவற்றிற்கு 01.01.2019 முதல் தடை செய்யப்படுவதாக அறிவித்தார்.

தமிழ்நாட்டில் 664 உள்ளாட்சி அமைப்புகளில், நாளொன்றுக்கு 1098 டன் நெகிழி கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 90 சதவீத நெகிழி கழிவுகள் உள்ளாட்சி அமைப்புகளால் சேகரிக்கப்பட்டு அதில் மறுசுழற்சி நெகிழி பொருட்கள் மறுசுழற்சியாளர்களிடம் விற்கப்படுகின்றன. குறைந்த மதிப்புள்ள நெகிழி சாலைகள் அமைப்பதற்கும் மற்றும் மறுசுழற்சியாகாத அதிக எரிதிறன் கொண்ட நெகிழி பொருட்கள் சிமெண்ட் ஆலைகளுக்கும் எரிபொருளாக அனுப்பப்படுகிறது.

நெகிழி கழிவு மேலாண்மை விதிகள், 2016 விதி 13-ன்படி, தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் 91 நெகிழி உற்பத்தியாளர்களுக்கும், 98 நெகிழி மறுசுழற்சி தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் 8 பல்வேறு அடுக்கு கொண்ட நெகிழி தயாரிப்பாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நெகிழி கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைத்தல் 90 சதவிகித பிட்டுமென் மற்றும் 10 சதவிகித நெகிழி கழிவுகளை சிறு துகள்களாக்கி கலந்து தயாரிக்கப்படும் சாலைகளானது நகராட்சி திடக்கழிவுகளில் உள்ள நெகிழியின் கூறுகளை எளிதில் அகற்றி மீதமுள்ள நெகிழியற்ற திடக்கழிவுகளை கரிம உரமாக மாற்ற உதவுகிறது.

2011-12 முதல் 2014-15 வரை தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.218.67 கோடி நிதியின் மூலம் 1599.36 மெட்ரிக் டன் எடை கொண்ட நெகிழி கழிவுகளை பயன்படுத்தி 1599.36 கி.மீ தூரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெகிழி கழிவுகளைக் கொண்டு பிடிப்புத்தன்மை மிகுந்த சாலைகள் அமைத்தல், நெகிழிப் பொருட்களை சுமார் 1200 டிகிரி செல்சியஸ் முதல் 1500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடையச் செய்யும் போது கிடைக்கும் உருகிய நிலையைக் கொண்டு பிடிப்புத்தன்மை மிகுந்த சாலைகள் அமைக்கப்படுகின்றன.

திருச்சி, கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் பயன்படுத்தப்பட்ட நெகிழி புட்டிக்களைக் (பிளாஸ்டிக் பாட்டில்) கொண்டு நெகிழியை மறுசுழற்சி செய்ய முதலமைச்சரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.பயன்படுத்தப்பட்ட நெகிழி புட்டிக்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான நகரத்தின் முதல் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டிராப் அண்டு டிரா திருச்சி மாநகராட்சி மூலம் ரூ.1.8 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோன்ற இயந்திரங்கள் கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலும், ஈரோடு ரயில் நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இவ்வகையான இயந்திரங்கள், பயன்படுத்தப்பட்ட நெகிழி புட்டிகளை ஏற்றுக்கொண்டு அதற்கு மாறாக ஒரு கோப்பை குடிநீர் அல்லது இலவசமாக அலைபேசியில் சார்ஜ் ஏற்ற பயன்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.