ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு -மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் தாக்கு

சென்னை
தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாததால் ஸ்டாலின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் கூறினார்.
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட இரண்டாம் கட்ட கழக அமைப்பு தேர்தல் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.
கழக நிர்வாகிகள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் க.பாண்டியராஜன், எஸ்.அப்துல்ரஹீம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர், கழக செய்தி தொடர்பாளர் கே.சிவசங்கரி, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆகியோரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகி விட்டது. தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை. இதனால் ஸ்டாலின் அரசை மக்கள் விரும்பவில்லை, கழக ஆட்சியை தான் விரும்புகின்றனர்.
அவர்களின் எண்ணத்தை நாங்கள் விரைவில் நிறைவேற்றுவோம். கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மூடுவதும், முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதும் தான் தி.மு.க. அரசின் வேலையாக இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த செயலை முறியடிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் பேசுகையில், பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண நிதி, பொங்கல் ரொக்க பரிசு தொகை வழங்காதது மக்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. மக்கள் மனதில் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் விரைவில் கழக ஆட்சி ஏற்பட பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் எம்.ஏ.சேவியர், டி.ஒய்.கே.செந்தில்குமார், என்எம்.பாஸ்கரன், எம்.இளங்கோவன், ஆர்.நித்தியானந்தம், சீனிவாச பாலாஜி, மற்றும் ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதிக்கான தேர்தல் ஆணையர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.