தற்போதைய செய்திகள்

பெண்களை வாழ்வில் முன்னேற்றுவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் – அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதம்

திருவாரூர்

பெண்களை வாழ்வில் முன்னேற்றுவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் பெருமிதத்துடன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் 500 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனங்களை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

மகளிர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்திய அம்மா அவர்கள் வழியில் அம்மா தந்த திட்டங்களை அப்படியே தந்து, தமிழக மக்களின் நலன்காக்கின்ற அரசாகவும், ஏழை, எளிய சாதாரண மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற முதல்வராகவும் தமிழக முதல்வர் திகழ்கிறார்.

அந்தவகையில், பெண்களின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதினை கருத்தில் கொண்டு பெண்களுக்கான திட்டங்களை தருவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மேலும், ஏழை, எளிய பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுகின்ற வகையிலும், பெண் கல்வியை ஊக்குவிக்கின்ற வகையிலும் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவிதொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கமும் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், பட்டம் படிப்பு அல்லாதவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் திருமண உதவி தொகையாக புரட்சித்தலைவி அம்மாவால் அறிவிக்கப்பட்டு தமிழக அரசால் தொடர்ந்து இன்றுவரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், தொலைநோக்கு பார்வை கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் சொந்தகாலிலே நிற்க வேண்டும். தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டத்தினை அறிவித்தார். இந்த திட்டம் முதல்வரால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இன்றையதினம் 500 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை 4973 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 43 லட்சம் மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை உழைக்கும் மகளிர்கள் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் பீ.கே.யு.மணிகண்டன், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை தலைவர் கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.