தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டம்

தருமபுரி

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தருமபுரி அருகே நூலஹள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் மற்றும் புதிய மின் வாரிய அலுவலகத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு யுஜிசி அறிவித்த அறிவிப்புக்கிணங்க இந்த மாத இறுதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்காத மாணவர்களும் விண்ணப்பித்து இடம் இருக்கின்ற கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்ற நிலையை முதலமைச்சர் எடப்பாடியாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றிருக்கும் மாணவர்கள் இந்த மாதம் 31-ந்தேதி வரை விண்ணப்பித்தவர்கள் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள் கல்லூரியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் காலியாக இருப்பின் அதில் சேர்ந்து கொள்வதற்கு விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என்பதை மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐஓஇ ஸ்டேட்டஸ் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடிதம் எழுதி இருக்கிறார் என்ற கேட்கிறீர்கள். இன்றைக்கு ஐஓஇ ஸ்டேட்டஸ் என்பது இன்றைக்கு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உயர்கல்வியில் செலுத்திய கவனத்தின் காரணமாகவும், உயர்கல்விக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தின் காரணமாகவும் தான் இன்று அந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அந்த அந்தஸ்தை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்ற கருத்தை மத்திய அரசு சொல்லி இருக்கிறது. அதில் இருக்கின்ற ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நீண்ட நெடிய நாட்களாக போராடி பெற்ற இட ஒதுக்கீடு 69 சதவீதம் என்பது தமிழகத்தில் கேள்விக்குறியாக இருக்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 461 கல்லூரிகள் சேர்ந்து இருக்கிறது. அனைத்து கல்லூரிகளும் சேர்ந்துதான் அண்ணா பல்கலைக்கழகம் .ஆகவே அந்த நான்கு நிறுவனங்களை மட்டும் பிரித்து கவனம் செலுத்துகிறோம். ஆராய்ச்சி மாணவர்கள் அதிகப்படியாக அந்த நான்கு இன்ஸ்டிடியூட்டில் மட்டுமே சேர்வார்கள். உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு தேர்ச்சி சதவீதம் குறைவு. அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதில் கவனம் செலுத்துவதில்லை. அந்த கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் நல்ல கல்வியை தர வேண்டும் என்று வடிவமைக்க கூடிய வகையில் இருக்க வேண்டும் .

நான்கில் ஆராய்ச்சி மேம்பாட்டு அதிக கவனம் செலுத்தி மீதம் இருக்கின்ற அத்தனை கல்லூரிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைவு பெற்ற கல்லூரிகளில் அதிக அளவில் உள்ளது. ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அம்மாவின் வழியில் ஆட்சி செய்கின்ற முதலமைச்சரின் அனுமதியோடு நாம் அந்த நிலையை உருவாக்கி இருக்கின்றோம். அண்ணா சீர்மிகு பல்கலைக்கழகம் என்று போகும்போது 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 69 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக மாணவர்களுக்காக போராடி கொண்டுவரப்பட்டது. அதை நாம் பறிகொடுத்து விட்டோம் என்றால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நுழைவுத் தேர்வு வைத்துவிடுவார்கள். தமிழக மாணவர்கள் ஒருவர் கூட சேர முடியாது. எந்த சூழ்நிலையிலும் இட ஒதுக்கீடு நுழைவுத் தேர்வு கட்டண உயர்வு ஆகும். இதற்கு அம்மாவுடைய அரசு துணை போகாது.

தமிழக மாணவர்களை காப்பதுதான் அம்மா வழியில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற முதலமைச்சரின் நிலைபாடு. அது ஐஓஇ ஸ்டேட்டஸ் வருகிறது என்பதற்காக அதை பெற தயாராக இல்லை. அந்த சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து தேவை இல்லை. அதை விட ஏற்கனவே சிறப்பாக செய்திருக்கிறார். ரூ.1570 கோடியை எவ்வாறு ஈட்டிப்பு செய்வீர்கள் என்று தமிழக அரசு அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறது. கட்டணம் அதிகரிப்பு வரும் இணைவு பெற்ற கல்லூரிகளில் இருந்து வரும் தொகையை எடுத்து மேம்படுத்துவோம் என்று அவர் கூறுகிறார். அனைத்து மாணவர்களையும் மேம்பாடு அடைய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத்தியதற்காக தமிழக அரசு விளக்கம் கோரியுள்ளது.அண்ணா பல்கலைக்கழகம் நான்கு மண்டல மையங்கள் மற்றும் 13 உறுப்புக்கல்லூரிகளை உள்ளடக்கியது. சிறப்பு அங்கீகாரத்திற்கு 13 உறுப்பு கல்லூரிகளை விடுத்து நான்கு மண்டல மையங்களை மட்டுமே பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக 13 உறுப்பு கல்லூரிகளின் தரம் பாதிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழத்தின் உறுப்புக்கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

பேட்டியில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.