சிறப்பு செய்திகள்

`வெற்றி’ ஒன்றையே இலக்காக கொண்டு இணைந்து பயணிப்போம் – தொண்டர்களுக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தேனி

ஒரு ஸ்டாலின் அல்ல, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் கழகத்தை ஒன்றும் செய்ய முடியாது. வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மாவட்ட கழகம் சார்பில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றி ஆலோசனைகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி இந்த இயக்கத்தை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினாரோ அவருடைய மறைவுக்கு பின்னால் புரட்சித்தலைவி அம்மா நமது இயக்கத்தை வலுவான இயக்கமாக பேரியக்கமாக, எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக வளர்த்தெடுத்திருக்கிறார்.

அம்மா அவர்கள் எனக்கு பின்னாலும் 100 ஆண்டுகளுக்கு மேல் கழகம் ஆட்சியில் இருக்கும் என்று தன்னுடைய தீர்க்க தரிசனமாக சொன்னார்களே அதெல்லாம் நடக்குமா நடக்காதா என்ற சூழ்நிலையில் வந்த சோதனைகள், வேதனைகளை எல்லாம் கடந்து இன்று சரித்திரங்கள் படைத்து அனைத்து நிலைகளிலும் நாம் ஒருங்கிணைக்கப்பட்டு வலுவான இயக்கமாக யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாக இயக்கமாக தொண்டர்கள் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.

புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார்கள். அதன் அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பையும் மக்களாட்சி தத்துவத்தின்படி நிறுவி சிறப்பான ஆட்சியை தந்தார்கள். கிட்டத்தட்ட புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் 29 ஆண்டுகாலம் தமிழகத்தின் முதலமைச்சர்களாக சிறப்பான, சீர்மிகு மக்களாட்சியை மக்களுக்கு, நாட்டுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றியும், தமிழக ஜீவாதாரத்திற்கு எப்பொழுதெல்லாம் பங்கம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் சட்டப் போராட்டம் நடத்தி அதை மீட்டுத் தந்து சரித்திரம் படைத்த முதலமைச்சார்களாக இருந்தார்கள்.

அதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. காவேரி, முல்லைபெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் அதனை மீட்டுத் தருகின்ற இயக்கமாக நமது கழகமும், தலைவர்களாக புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் இருந்து இந்திய அரசியல் வரலாற்றில் தங்களுக்கென்று தனி முத்திரை பதித்துள்ளனர். இது மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இப்பொழுது நமது இயக்கத்தில் உங்களின் ஒருவனாக, தொண்டனாக இருந்த நான் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஒரு தொண்டர் முதல்வராகவும் இருக்கின்றோம்.

கழகத்தின் தலைமை பொறுப்புக்கு நீங்கள் தான் என்னை ஏற்றியிருக்கிறீர்கள். அதற்காக என் வாழ்நாள் முழுவதும் எனது கடமையை, பணியை இந்த இயக்கத்திற்கு ஆணிவேராக இருந்து புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் கட்டிக்காத்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக சிறு துரும்பாக, சல்லிவேராக பயன்படுவேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற தேர்தலை எதிர்நோக்கியிருக்கிற நாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் யாரை, எந்த கட்சியை தமிழகத்தின் தீயசக்தி என்று குறிப்பிட்டு கழகத்தை உருவாக்கிய பொழுது மக்களும், தொண்டர்களும் ஆதரவு தந்தார்கள். இன்றைக்கும் மக்களின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும் நமது இயக்கத்திற்கு நிலைத்திருக்கிறது. பெருமையாக பேசிக் கொள்கிறோம். தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பட்ட இயக்கம் கழகம்.

அதிக ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் உரிமையை மக்களிடம் பெற்ற ஒரே கட்சி நமது கழகம் மட்டுமே. இன்று 30 ஆண்டுகளை கடந்து கழக ஆட்சி சென்று கொண்டிருக்கின்றது. மற்ற எந்த இயக்கத்திற்கும் இந்த பெருமை இல்லை. அப்படிப்பட்ட இயக்கத்தை உருவாக்கிய புரட்சித்தலைவருக்கும், வளர்த்தெடுத்த புரட்சித்தலைவிக்கும் உறுதுணையாக இருந்த சக்தி தொண்டர்கள் சக்தி தான். கழகத்தின் தொண்டர்கள் தங்களின் உயிரை தியாகம் செய்து தற்போது நமது இயக்கம் வலுவான இயக்கமாக இருக்கிறது.

இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு விசுவாசமிக்க தொண்டர்களாக செயல்படுவது தான் நாம் நமது இயக்கத்திற்கு செய்யும் ஒரே நன்றிக் கடனாகும். அந்த நிலையில் இருந்து தான் நாம் செயல்பட வேண்டும். அதை தான் தேனி மாவட்ட கழகம் உறுதியாக நின்று செயல்படுத்தி வருகிறது. அதனால் தான் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி முதலமைச்சர்களாகி இருக்கிறார்கள். ஏன் நான் கூட உங்களால் முதலமைச்சராகி இருக்கிறேன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது என்று சொன்னால் தேனி மாவட்டமும், நமது தாய் மாவட்டமான மதுரை மாவட்டமும் இணைந்து தான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். விசுவாச தொண்டர்கள் நமது மாவட்டத்தில் நிறைந்து இருக்கிறார்கள்.

கழகத்திற்கு எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும், அதனை கடந்து பணியாற்றக்கூடிய தொண்டர்களாக நிறைந்திருக்கிறார்கள் என்றைக்கும் இருப்பார்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரு தொண்டனுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கூட்டுறவு, உள்ளாட்சி தேர்தல்களில் அதிகளவில் தொண்டர்கள் வெற்றி பெறலாம்.

கூட்டுறவு தேர்தலில் 2 லட்சம் கழக தொண்டர்களை தலைவராக, உறுப்பினர்களாக ஆக்கிய ஒரே கட்சி நமது கழகம் மட்டுமே என்றும், உள்ளாட்சி தேர்தலில் 96 சதவிகித இடங்களில் நமது கழக தொண்டர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று புரட்சித்தலைவி கூறியிருக்கிறார். சிறு சிறு தவறுகள் கூட நடக்காமல் தொண்டர்கள் தங்களது விசுவாசத்தை காண்பிக்கும் ஒரே சந்தர்ப்பம் தேர்தல் தான். எந்த சூழ்நிலையிலும் கழக தொண்டன் வெற்றி பெற வேண்டும்.

இதுதான் இயக்கத்திற்கு தொண்டன் ஆற்றும் பணியாகும். தேனி மாவட்டம் மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் கடுமையாக உழைத்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். கழகத்தில் ஒருங்கிணைப்பாளர், முதல்வர் செல்கின்ற பாதையினையே தொண்டர்களும் பின்பற்ற வேண்டும்.

நாங்கள் அவசர படமாட்டோம். பதவி என்பது அவர்கள் செயல்பாடுகள் மூலம் தானாக வர வேண்டும். நகர கழக செயலாளராக சிறப்பாக பணியாற்றினால் இவர் மாவட்ட செயலாளராக வந்தால் சிறப்பாக இருக்கும் என்று தொண்டர்கள் நினைக்கும் அளவிற்கு நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். அந்த பதவி தான் நிலைத்திருக்கும். கடமையை செய், பிரதிபலனை எதிர்பாராதே என்று கட்சிக்கு விசுவாசமாக நாம் உழைத்தோம் என்றால் பதவி தானாக தேடி வரும். இதற்கு நாங்கள் எல்லாம் உதாரணம். ஆனால் பதவிக்கு வந்த பிறகு இயக்கத்தை வலுவான இயக்கமாக, கட்டுக் கோப்பான இயக்கமாக காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதை நாங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருப்போம்.

நமது கழகத்தால் அடையாளம் காட்டப்பட்டு அதன் மூலம் பல பதவிகளை பெற்று அனுபவித்து விட்டு மாற்று இயக்கத்திற்கு சென்று வளர்த்த இயக்கத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று கூறுகிறார்கள். 50 ஆண்டுகால கழக அரசியல் வரலாற்றில் நமது இயக்கத்திற்கு யாரொருவர் துரோகம் செய்கிறார்களோ அவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அவர்களை புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆன்மாக்கள் பார்த்துக் கொள்ளும். நாம் அனைவரும் நமது கடமையை ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் நமது பணியை ஆற்றுவது தான் விசுவாசமிக்க தொண்டனின் பணி என்று கேட்டுக் கொள்கிறேன்.

கழகத்தை தொண்டர்கள் தானே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று லேசாக அசைத்து பார்த்து விடலாம் என எல்லா வழியிலும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். கழக தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நின்றால் ஒரு ஸ்டாலின் இல்லை ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் நமது இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. அவருடைய தந்தையாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறப்பான அம்மா ஆட்சி அதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த குறையும் இல்லாத ஆட்சி. கட்சியில் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், நிர்வாகிகள் தொண்டர்களை கட்டுக்கோப்பாக நிர்வகித்து வருகிறார்கள். கழக தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள் கடமையை செய்யுங்கள் பிரதிபலன் தானாக வந்து சேரும்.

கழகத்தின் பணிகளான உறுப்பினர் சேர்க்கையை நீங்கள் நிறைவாக ஆற்றியுள்ளீர்கள். 49-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட 17ம்தேதியன்று நாம் அனைத்து பகுதிகளிலும் கழக கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிட வேண்டும். முகாம் அமைத்து வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், சேர்த்தல் பணியை சிறப்பாக ஆற்ற வேண்டும். சார்பு அணிகளில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும்.

இதுபோன்ற அடிப்படை பணிகளை நாம் செய்து முடிக்க வேண்டும். இப் பணிகளை செய்து முடித்து விட்டால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற முடியும். இப்பணிகள் மூலம் நமது கழகம் தேனி மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி வாய்ப்பை உறுதியாக பெறும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி ஆர்.பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் டி.டி.சிவக்குமார், மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளா முருகன், மாவட்ட துணை செயலாளர் வசந்தா நாகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா நடேஷ், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ் நன்றி கூறினார்.