சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

ஆழியாரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வி.கே.பழனிசாமிக்கு மணிமண்டபம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்

கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாரில் ரூ.1 கோடி மதிப்பில் வி.கே.பழனிசாமி கவுண்டர் மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழயில் முதலமைச்சர் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அரசானது அதிக வேளாண் விளைச்சலும், வறுமை ஒழிப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்பதை உணர்ந்து வேளாண் நலன்காக்கும் அரசாக திகழ்ந்து வருகின்றது. மேலும், நாட்டின் முதன்மைத் தொழிலாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு இன்றியமையாததாகவும் விளங்கும் வேளாண்மைத்துறைக்கு தமிழ்நாடு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

2020-21-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, வேளாண்துறைக்கு ரூ.11 ஆயிரத்து 894 கோடியே 48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, வேளாண்மைத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சிறந்த செயல்பாட்டின் காரணமாக உலக வேளாண் விருது, ‘ஸ்கோச் விருது” உள்ளிட்டவை வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

சாகுபடி பரப்பினை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளை கையாளுதல், விதைகள் உரங்கள் ஆகியவை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்தல், தேவையான பயிர்கடன் வழங்குதல் பாசன வசதி அளித்தல், மானிய விலையில் இயந்திரங்களை வழங்குதல், என பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருவதன் காரணமாக தமிழகத்தில் இரண்டாம் பசுமைபுரட்சி ஏற்பட்டு வருகின்றது.

விவசாயத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வண்ணம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலமைச்சர் ஒரு விவசாயியாக இருப்பதனால் விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்களை அறிந்து தானே முன் வந்து பல வேளாண் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்த்து அவர்களுக்கான திட்டங்களை பெற்று தருவதற்கு அரும்பாடுபட்டவர்கள் பலர். அதிலும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பரம்பிகுளம் ஆழியார் அணைத்திட்டத்திற்காக பாடுபட்டவர் தான் வி.கே.பழனிசாமி கவுண்டர். உலகத்து உயிர்களுக்கு எல்லாம் வாழ்வளிப்பது உணவே ஆகும். அந்த உணவை வழங்குவது நிலமும், நீரும் இணைந்திருப்பது மிகமிக அவசியம். தென்கொங்கு நாட்டின் வறண்ட நிலங்களை எல்லாம் வளமான பூமியாக மாற்றிய பெருமை இத்திட்டத்துக்கு உண்டு. இத்திட்டத்திற்கு அடிதளமாக இருந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர் ஆவார்.

ஆனைமலையின் மேற்கு பகுதியில் ஏராளமான தண்ணீர் யாருக்கும் பயனின்றி கடலில் கலக்கும் தண்ணீரை திருப்பிக் கீழே கொண்டும் வரும் திட்டம் குறித்து அவர்கள் சிந்தித்து வந்தார். இச்சூழலில் 1937-ல் முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் இவர் பரம்பிக்குளம் திட்டம் பற்றிய கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பல ஆண்டுகள் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தவர் வி.கே.பழனிசாமி கவுண்டர் ஆவார். அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பரம்பிக்குளம் திட்டம் பற்றியே பேசியுள்ளார். அவரின் தொடர் முயற்சிகளும், வற்புறுத்துதல்களும் பயனளித்தன. அன்றைய முதல்வர் காமராஜர், பொதுப்பணித்துறையிடம் இத்திட்டத்தை ஆராயுமாறு உத்தரவிட்டார்.

மலைப்பகுதியில் மேலே செல்வதற்கு பாதைகள் ஏதும் கிடையாது. மலைவாழ் மக்களும், யானைகளும் பயன்படுத்தும் பாதைதான் ஒன்று இருந்தது. இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய வி.கே.பழனிசாமி கவுண்டர் மற்றும் பொறியாளர் குழுவினர் யானைகளின் மீதேறி புறப்பட்டார்கள். ஆய்வு செய்த பொறியாளர் குழுவினர் திட்டம் தொடர்பாக சாத்தியமான அறிக்கையினை அளித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்பகுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இன்று பாசனப் பயன்பெற்று வருகின்றது. உணவு உற்பத்தி பெருகியது. விவசாயிகளின் நிலை உயர்ந்தது. பொதுநல நோக்குடன் செயல்பட்டதால் வி.கே.பழனிச்சாமி கவுண்டரின் கனவு தொடர்ந்து பல்லாண்டு முயற்சிகளுக்குப் பிறகு நிறைவேறியது. பரம்பிக்குளம் திட்டம் என்றவுடன் வி.கே.பழனிச்சாமிக் கவுண்டர் எனும் பெயர் நினைவுக்கு வரும் என்பது என்றும் வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். ஆனால் பரம்பிக்குளம் ஆழியார் நீர்பாசனத்திட்டத்தின் மூலம் அவர்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

முதலமைச்சர் விவசாயிகளின் நலனை காக்க பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டுத் திட்டம் தொடங்க காரணகர்த்தவாக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டரை சிறப்பு செய்யும் விதமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவரது திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் இன்று மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் முதலமைச்சர் உழவுத்தொழிலையும், உழவர்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதற்கு சான்றாக விளங்குகின்றது. தமிழ்நாடு அரசு என்றென்றும் விவசாயிகளின் நலன் காக்கும் அரசாகவே தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.