தற்போதைய செய்திகள்

சுற்றுலா தொழில் வளர்வதற்கு தமிழகத்துக்கு ரூ.250 கோடி நிதி – மத்திய அரசிடம் அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் வலியுறுத்தல்

சென்னை 

சுற்றுலா தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்துக்கு ரூ.250 கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் வலியுறுத்தினார்.

உலக வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு பாதித்துள்ள கொரோனா தொற்று நோய் தாக்கத்தின் போது சுற்றுலாத் துறையை முன் எடுத்து செல்வதில் இந்திய அரசு சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை மறுஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் நேற்று ஏற்பாடு செய்த மெய்நிகர் கூட்டத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் கலந்து கொண்டார். இதில் சுற்றுலாத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், சுற்றுலா ஆணையரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான த.பொ.ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் பேசுகையில்,“சாத்தி” விருந்தோம்பல் தொழிலுக்கான மதிப்பீடு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கான அமைப்பிற்கான தரவுத்தளம் மற்றும் “நிதி”-விருந்தோம்பல் தொழில்துறையின் தேசிய ஒருங்கிணைந்த தரவுத்தளம், பல்வேறு விருந்தோம்பல் சேவைகள் மற்றும் வசதிகளை மின்னணு முறையில் வழங்க வழி செய்கிறது. நிதி என்ற தரவுத்தளத்தில் இதுவரை 1082 அலகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2014-2018 முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழகம் முதலிடத்தை பெற்றிருக்கிறது. 2019ம் ஆண்டில் மட்டும் 49.49 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 68.66 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர் என்றார்.

மேலும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளை அமைச்சர் கூட்டத்தில் எடுத்துரைத்தார். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு மாநில அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பயணிகள் எங்கும் செல்ல வசதியாக நம் மாநிலத்திற்கிடையே பயணம் மேற்கொள்வது எளிதாக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் கடைபிடிக்க ஹோட்டல்களும் உணவகங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிட் காலத்தில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் ‘பாதுகாப்பான இடங்கள்’ மற்றும் ‘பாதுகாப்பான தளங்கள்’ என்ற கருத்து இப்போது வளர்ந்து வரும் மந்திரமாக இருக்கப் போகிறது. சுற்றுலாத்துறையில் இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகவும், நிலைத்த சுற்றுலா தொழில் மீண்டெழ, புத்துயிர் பெற, குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட கால செயல் திட்டங்கள் முன்னெடுத்து செல்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

பயண மற்றும் சுற்றுலா தொழில் அதிக பின்னடைவு அடைந்திருந்தபோதும், இதுபோன்ற எதிர்பாராத அதிர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்ளவும் நிலைத்த மற்றும் பொறுப்புள்ள சுற்றுலாவை முழுவதுமாக தழுவும் வகையில் நிச்சயம் மீளும் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன் பின்வரும் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

விருந்தோம்பல் மற்றும் பயணத்துறையில் தேவை மற்றும் நுகர்வோர் செலவினங்களை தூண்டுவதற்காக, விமான, ரயில் அல்லது சாலை பயணம், தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய துறைகளில் 50 விழுக்காடு மானியம் வழங்குவதன் மூலம் சுற்றுலா அமைச்சகம் ”நாம் பயணிப்போம்” என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தலாம், மத்திய அரசு ஊழியர்களுக்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விடுப்பு பயண சலுகை ரொக்க சீட்டு வழங்கும் திட்டத்தையும் இந்திய அரசு மறு பரிசீலனை செய்யலாம். ஏனெனில், இத்திட்டம் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறையை வெகுவாக பாதிக்கும்.

கோவிட் தொற்று நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மேலும் நிதி நெருக்கடி மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாததால் அனைத்து சுற்றுலா தொழில் முனைவோர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சுற்றுலாத் தொழில் புத்துயிர் பெற்று திகழ்வதற்காக, புதுமையான உத்திகளை கையாண்டு தொழில் வளர்வதற்கு 250 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழகத்திற்கு சிறப்பு நிதி மானியமாக ஒதுக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு சுற்றுலா துறை கீழ்க்கண்ட கருத்துருக்களுக்கான முதற்கட்ட திட்ட அறிக்கைகளை அனுப்பி வைத்துள்ளது. கடந்த ஆண்டு பாரத பிரதமரின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் தொடர்ச்சியாக மாமல்லபுரத்தை ஐகானிக் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த ரூ.563.50 கோடிக்கான திட்டம். சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.99.84 கோடிக்கு ராமாயண சுற்று மேம்பாடு மற்றும் ரூ.99.31 கோடிக்கு அறுபடை வீடு சுற்று மேம்பாடு. இந்த திட்டத்திற்கான நிதி ஒப்பளிப்பை விரைவுபடுத்துமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் அரிய சுற்றுலா காரணிகளை கொண்டுள்ள ‘கிராமிய சுற்றுலா’, ‘சாகச சுற்றுலா’, ‘கப்பல் சுற்றுலா’ மற்றும் ‘நீர் விளையாட்டு’ போன்ற புதிய சுற்றுலாக்களை இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிதி உதவியின் மூலம் முழுமையாக உள்நாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.