சிறப்பு செய்திகள்

ஊழலுக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க.வினர் – கோவையில் முதலமைச்சர் பேட்டி

கோவை, டிச. 29-

ஊழலுக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க.வினர் தான். துரைமுருகனின் கல்லூரி சுவரை தட்டினால் ஊழல்,ஊழல் என்று சத்தம் கேட்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

நேற்றைய தினம் (27ம்தேதி) கழகத்தின் தேர்தல் பிரச்சாரத் தொடக்க நிகழ்ச்சியில் நான் சென்னையில் உரையாற்றினேன். அப்போது, நான் சொன்ன கருத்துக்கு, எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் துரைமுருகன் நாங்களெல்லாம் ஊழல்வாதிகள் என்று ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஊழலுக்குச் சொந்தக்காரரே திமுககாரர்கள் தான். துரைமுருகன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது எவ்வளவு சொத்து இருந்தது? இப்போது எவ்வளவு சொத்து இருக்கிறது. அன்றைய சொத்து விவரத்தையும், இன்றைய சொத்து விவரத்தையும் வெளியிடுவாரா? இன்றைக்கு மிகப்பிரம்மாண்டமான கல்லூரி இருக்கிறது. அந்தக் கல்லூரியின் சுவரை தட்டினால் அதில் ஊழல், ஊழல் என்று சத்தம் கேட்கும். அந்தளவிற்கு ஊழல் செய்து கட்டப்பட்ட கட்டடம் அந்தக் கல்லூரி. அவர் எங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இந்திய நாட்டின் வரலாற்றிலேயே ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று சொன்னால், எதற்காக நிறுத்தப்பட்டதென்று அனைவருக்கும் தெரியும். தேர்தல் நேரத்தில், கோடி, கோடியாக பணத்தை வாக்காளர்களுக்கு அளித்து அதன்மூலம் வெற்றி பெறலாமென்று எண்ணி பதுக்கி வைத்திருந்த பணத்தை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து, வருமான வரித்துறை மூலமாக கைப்பற்றியது. ஊடகங்களின் மூலமாக நாங்களும் பார்த்தோம். அனைத்து ஊடகங்களும் வெளியிட்டீர்கள். ஏறத்தாழ ரூபாய் 11 கோடி என்று கருதுகிறேன். அவ்வளவு பணம் கைப்பற்றியுள்ளனர். அதற்கான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் மறந்து துரைமுருகன் எங்கள் மீது குற்றம் சொல்கிறார். நான் என்னுடைய சொத்து விவரத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய சொத்து விவரத்தை சொல்லட்டும்.

ஏனென்றால், அவர் படிக்கின்ற போதே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் உதவி செய்தாரென்று அவரே சொல்லியிருக்கிறார். பலர் சொல்லியும் நான் கேட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் அப்படியிருந்தவர், இந்தக் காலத்தில் இப்படியிருக்கிறார். அதை, மக்களுக்கு தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன். யார் ஊழல் செய்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். ஊழல், ஊழல் என்று ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குவது திமுக தான்.

அதோடு, முன்னாள் மேயர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற மா.சுப்பிரமணியன் சிட்கோ-வில் வேலை செய்பவர்களுக்கு லேபர் காலனியில் நிலம் ஒதுக்கீடு செய்த ஒருவரிடமிருந்து இவர் மனைவி மீது சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை வாங்கியது மட்டுமல்லாமல், அந்த நிலத்திலேயே அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டி, அவர் மேயராக இருக்கும் போது வரி விதித்திருக்கிறார். அந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு குற்றச்சாட்டும் தன் மீது கொண்ட அவர் எங்கள் மீது குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிடுகிறார். இதுதான் வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.