தற்போதைய செய்திகள்

பொன்விழா ஆண்டில் தமிழ்நாடு, புதுவையில் கழக ஆட்சி அமையும் – ஓம்சக்திசேகர் உறுதி

புதுச்சேரி

பொன்விழா ஆண்டில் தமிழ்நாடு, புதுவையில் கழக ஆட்சி நிச்சயம் அமையும் என்று ஓம்சக்தி சேகர் உறுதிபட தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில கழகம் சார்பில் கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழா ஓம்சக்திசேகர் தலைமையில் குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவ படங்களுக்கு புதுச்சேரி மாநில முன்னாள் அம்மா பேரவை செயலாளர் ஓம்சக்திசேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கழக கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதன் பின்னர் புதுச்சேரி மாநில புரட்சித்தலைவர் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் 25 பேருக்கு சீருடை மற்றும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஓம்சக்திசேகர் பேசியதாவது:-

ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழ்நாடு சிக்கி விடக்கூடாது என்பதற்காக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை தொடங்கினார். அதனைத்தொடர்ந்து கழகத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தன் கண்ணை போன்று காத்து வந்தார். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக வாழ்ந்தார். 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே இயக்கம் கழகம். அம்மா மறைவுக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனி்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கழகத்தையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி செல்கின்றனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளின் பொற்காலமாக தமிழகம் திகழ்கிறது.

இன்று கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடுகிறோம். 50-ம் ஆண்டு (பொன்விழா) ஆண்டு நடக்கும்ேபாது தமிழகத்திலும், புதுவையிலும் கழக ஆட்சி அமையும். இவை யாவும் அம்மாவின் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் திறமையால் நிச்சம் நிறைவேறும். இது உறுதி.

இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் ஆர்.வி.திருநாவுக்கரசு, காசிநாதன், பேராசிரியர் மு.ராமதாஸ், மாநில துணை செயலாளர்கள் கோவிந்தம்மாள், செயற்குழு உறுப்பினர் இந்திரா முனுசாமி, மாநில அணி செயலாளர்கள் விஜயலட்சுமி, குணசேகரன், தொகுதி செயலாளர்கள் வில்லியனூர் மணி, நெல்லித்தோப்பு கணேசன், பூக்கடை மணி மற்றும் மாநில பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.