சிறப்பு செய்திகள்

கடைக்கோடி மக்களும் பயன்பெறும் வகையில் கழக ஆட்சியில் திட்டங்கள் நிறைவேற்றம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

கோவை

கடைக்கோடி மக்களும் பயன்பெறும் வகையில் கழக ஆட்சியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்கா மற்றும் ரூ.3.47 கோடி மதிப்பில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள அம்மா கூட்டரங்கம், ரூ.48 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்து 683 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.60.58 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ேபசியதாவது:-

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது நகர்பகுதிகளை மட்டும் சார்ந்திருப்பது என்பது அல்ல. நகரப்பகுதிகளில் கிடைக்கும் அனைத்து வசதிகளும், கடைன்கோடி கிராமங்கள், மலைப்பகுதிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாகும். அந்தவகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வால்பாறையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வில் வளம்பெறும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி பகுதியில் அதிக தோட்ட தொழிலாளர்கள் வசித்து வரும் பகுதியாகும். வால்பாறை பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதனால் இப்பகுதிகளில் சுற்றுலா பயனிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்ற நோக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அவற்றிலும் நகரப்பகுதிகளில் மட்டும் வளர்ச்சியினை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல ஆண்டு காலமாக சாலை அமைக்கப்படாமல் இருந்த பல தனியார் எஸ்டேட் சாலை இன்று அரசின் சிறப்பு நடவடிக்கையாக ஷேக்கல்முடி சாலை, டேன் டீ சாலை (சின்கோனா), சின்னக்கல்லார் சாலை, சின்கோனா – பெரியகல்லார் சாலை, சின்கோனா – சின்கோனா 5-வது டிவிசன் சாலை, டாடா காபி – சோலையார் அணை சாலை, டாடா காபி – அணலி சாலை, புதுக்காடு சாலை, நடுமலை சாலை, காஞ்சமலை சாலை, அக்காமலை சாலை, வேவர்லி சாலை, சக்தி – தலநார் சாலை, பன்னிமேடு சாலை என மொத்தம் 12க்கும் மேற்பட்ட சாலைப்பணிகள் ரூ.54.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வால்பாறை நகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பிஏபி வளாகத்தில் 4.26 ஏக்கர் பரப்பளவில் அனைத்து பொழுதுபோக்கு பூங்காவை சுற்றிலும் சாலை வசதி ஏற்படுத்தும் விதமாக ரூ.2.58கோடி மதிப்பீட்டிலும் திட்டங்கள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு 112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 40ஆண்டுகளாக வால்பாறையில் படகு இல்லம் அமைக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்காவினை ஒட்டியுள்ள இடத்தில் சுமார் 4.20 ஏக்கர் பரப்பளவில் ரூ3.47 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான அண்ணாதிடலில் வால்பாறை பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதமாக வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்படுள்ளது. ரூ.4.5 கோடி மதிப்பில் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், பேருந்து பயணிகளின் வசதிக்காகவும், புதிதாக அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலா மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

வால்பாறை நகராட்சி பகுதியில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் 65 எண்ணிக்கையில் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் சிறய இலகு ரக உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.17.20 கோடி மதிப்பில் சிறு பாலம், நடைபாதை, சாலை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர், படிக்கட்டுகள், பள்ளிகளை சுற்றிலும் முள்வேலி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் விதமாக சுமார் 300 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தினை பெருக்கும் வகையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அக்காமலை செக்டேம் தூர்வாரப்பட்டு, புதிய பைப்லைன் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கம் பணி நடைபெற்று வருகிறது.வால்பாறை நகரின் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பயன் பெறும் விதமாக நகராட்சி சமுதாய கூடத்தினை அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக் கூடமாக ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் விதமாக நகராட்சி கால்பந்தாட்ட மைதானம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் எழில்மிகு நடை பயிற்சி தளத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.வால்பாறை நகர் பகுதியில் சேகரிக்கப்படும்; குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் விதமாகவும் பசுமை உரக்கிடங்கு திட்டத்திற்காக எம்சிசி சென்டர் அமைக்க ரூ.1.57கோடி நிதியை ஒதுக்கி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

வால்பாறை நகராட்சிக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் இடைப்பட்ட காலத்தில் அலுவலக அவசர தேவையை கருத்தில் கொண்டு ரூ.120 லட்சத்தில் பழைய அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு மேல் பகுதியில் அம்மா மாளிகை கூட்டரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் வால்பாறை பகுதியில் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரொனா வைரஸ் தொற்று நோய் எதிர்ப்பு மருந்து பெட்டகம் உள்ளிட்டவை வீடுகள் தோறும் வழங்கப்பட்டுள்ளது. வால்பாறை பகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் அவ்வப்போது மருந்து தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இதர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு இதுவரை நோய் தொற்றின் தாக்கம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டத்தில் உள்ள செட்டில்மெண்ட பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு வன உரிமைச் சட்டம் 2006 ன்படி 128 நபர்களுக்கு அனுபவ உரிமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று தலைமுறைகளாக இல்லாத வகையில் வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் 111 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் முழுவதும்இ அரசு போக்குவரத்தினையே நம்பியுள்ளாதால், அதிகளவிலான புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோலவே, வன விலங்கு நடமாட்டத்தினை கண்காணிக்கவும், மனித வனவிலங்கு மோதலை தடுக்கும் வகையில் இப்பகுதி இளைஞர்களை கொண்டு வேட்டைத்தடுப்பு காவலர்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக வனவிலங்குகளால் ஏற்பட்ட கால்நடை சேதம்இ பயிர் சேதம் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக கடந்த ஆறு ஆண்டுகளில் 75 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

வால்பாறை தாலுகாவில் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்ற காலத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரிசி, துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், அடங்கிய உணவு பொருள் தொகுப்பு 1659 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வால்பாறையில் செயல்பட்டு வந்த பாரதியார் பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரியினை அரசு கலை அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது.

வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.48 லட்சம் மதிப்பில் சமூதாயக் கூடம், வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் 51 உயர்மின் கோபுர விளக்குகள், நகராட்சி அலுவலகத்திற்கு கூடுதல் அலுவலக கூடுதல் கட்டடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.இந்த விழாவில் 683 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.60.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் வால்பாறை அமீது, வால்பாறை நகரக் கழகச் செயலாளர் மயில் கணேசன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ம.ரகுபதி, எஸ்.விஜயகுமார், ஜேம்ஸ் ராஜா, ஏ.ஆர்.வி.சாந்தலிங்ககுமார் மற்றும் கேபிள் நரசப்பன், சலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.