தற்போதைய செய்திகள்

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு கழக ஆட்சியில் உடனடி தீர்வு – அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு

விவசாயிகளின் கோரிக்கைகள் கழக ஆட்சியில் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், பவானி தொகுதியில் 606 பேருக்கு ரூ.62.35 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், பவானி தொகுதிக்குட்பட்ட கவுந்தபாடி, சின்னப்புலியூர், பெரியபுலியூர், கவுண்டன்புதூர், வைரமங்கலம், ராமகவுண்டன்வலசு மற்றும் பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்கு மானியத்தொகை, கறவை மாட்டு கடனுதவி மற்றும் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கவுந்தபாடி நெசவாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 375 நெசவாளர்களுக்கு ரூ.18,75,000 மதிப்பீட்டில் மானியத்தொகை, சின்னப்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 38 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சம் மதிப்பீட்டிலும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 மதிப்பீட்டிலும் கறவை மாட்டு கடனுதவி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 182 பயனாளிகளுக்கு ரூ.9,10,000 மதிப்பீட்டில் மானியத்தொகை, பெரியபுலியூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 10 நபர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை சான்றுகள் என மொத்தம் 606 பயனாளிகளுக்கு ரூ.62,35,000 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, கவுண்டன்புதூரில் ரூ.8,66,174 மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், வைரமங்கலத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நிழற்குடை, ராமகவுண்டன்வலசு பகுதியில் ரூ.12,85,188 மதிப்பீட்டில் புதிய பால் சொசைட்டி என மொத்தம் ரூ.26,51,362 மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் அரசாக திகழ்கிறது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயம் செழித்து வருகிறது. மேலும் விவசாய விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைத்து விலைவாசியும் கட்டுக்குள் உள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக தீர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஓர் ஆண்டிற்கு வட்டில்லா பயிர் கடன்கள் அதிகளவு வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கொரோனா தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.