தற்போதைய செய்திகள்

850 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி – அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ- ஆர்.பி.உதயகுமார் வழங்கினர்

மதுரை

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 850 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.

மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் கூட்டுறவுத்துறை மூலம் அம்மா நகரும் நியாய விலைக்கடை மற்றும் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடி ஆகியவற்றை தொடங்கி வைத்து, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழச்சியில் அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பேசியதாவது:-

மாநில அளவில் 892 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது வரை 834 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 32 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது வரை 22 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மட்டும் 10 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 300 வகையான கட்டுப்பாடற்ற பொருட்கள் 5 சதவீதம் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. நியாயவிலை கடைகளின் ஒரு பகுதியிலேயே திறக்கப்படுவதனால் பொதுமக்களிடம் பெருத்த வரவேற்பு உள்ளது.

கொரோனா காலத்தில் நியாயவிலை கடைகளில் பணிபுரிந்த 21,517 விற்பனையாளர்களுக்கு ரூ.2,500 வீதம், 3,777 கட்டுநர்களுக்கு ரூ.2000 வீதம் என மொத்தம் ரூ.6.13 கோடி வழங்கப்பட்டுள்ளது. விலையில்லா இரண்டு முகக்கவசம் வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இரண்டு விற்பனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 2 விற்பனையாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டதிலிருந்து மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் வேளாண் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் சிறந்த முறையில் மேற்கொண்டதனால், இந்த அசாதாரண சூழ்நிலையிலும் வேளாண் உற்பத்தியை அதிக்படுத்தி சாதனை படைத்துள்ளோம்.

ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கூட்டுறவுத்துறையின் மூலம் 2 கோடியே 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 மற்றும் விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கிய ஒரே மாநிலம் அம்மாவின் அரசு ஆளுகின்ற தமிழ்நாடு தான். இப்பெருமையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை ஆகியோர் நமக்குப் பெற்றுத் தந்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ேபசினார்.

முன்னதாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் வட்டம் மற்றும் மதுரை மேற்கு வட்டத்தைச் சேர்ந்த 175 பயனாளிகளுக்கு ரூ.21,00,000 மதிப்பிலும், வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 660 பயனாளிகளுக்கு ரூ.3,46,00,40 மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.3,60,000 மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.10,67,00 மதிப்பிலும், கொரோனா தொற்றினால் உயிரிழந்த நியாய விலைக்கடை விற்பனையாளரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.25 லட்சம் என மொத்தம் 850 பயனாளிகளுக்கு ரூ.4,06,27,480 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான் (எ) செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு இணைய துணை தலைவர் ஜெ.ராஜா, இணை பதிவாளர், கூட்டுறவுத்துறை ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.