திருவள்ளூர்

தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தரும் கழக நிர்வாகிகளுக்கு தங்கச்சங்கிலி பரிசு – சிறுணியம் பி.பலராமன் அறிவிப்பு

திருவள்ளூர்

சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் கழக நிர்வாகிகளுக்கு தங்கச்சங்கிலி பரிசாக வழங்கப்படும் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியை அடுத்த மீஞ்சூரில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்து பேசியதாவது:-

வரும் வெள்ளிக்கிழமை திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் மாபெரும் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். ஒவ்வொரு பூத்திலும்

3 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று தருபவர்களுக்கு 20 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

மாவட்ட செயலாளர் தங்கச்சங்கிலி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் தங்கள் பூத்தில் போட்டி போட்டு தேர்தல் பணி செய்வோம் என்று கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதி அளித்தனர்.

இக்கூட்டத்தில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, 15-வது வட்ட செயலாளர் காமராஜ், மீஞ்சூர் பேரூர் கழக துணை செயலாளர் தமிழரசன், வழக்கறிஞர் பிரிவு மீஞ்சூர் மாரி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அசோக், நகர இளைஞரணி செயலாளர் ராமதாஸ், வார்டு உறுப்பினர்கள் பாண்டு, மகேந்திரன், எம்.கே.சேகர், கே.எல்.ராஜன், மாவட்ட மாணவரணி துணைத்தலைவர் ஸ்ரீதர் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.