தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில் ஆரணி தொகுதி தரம் உயர்வு – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்

திருவண்ணாமலை

கழக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி ஆரணி தொகுதி தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரத்தில் 33 வார்டுகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 7 வார்டுகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை விழா ஆரணி தர்மராஜா கோவில் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது 1 முதல் 7 வார்டுளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்ந்திரன் முன்னிலையில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். அம்மா அவர்களால் உருவாக்கப்பட்டது தான் இளைஞர், இளம்பெண்கள் பாசறை அமைப்பு. கடந்த 2008-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த இயக்கம் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கழகம் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் அமைப்பாகும்.

இளைஞர், இளம்பெண்கள் பாசறை அமைப்பினை புத்துணர்ச்சியுடன் செயல்பட முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்து தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர்களை சேர்க்க ஆணையிட்டனர். அதன் பேரில் ஆரணி தொகுதி முழுவதும் கடந்த ஒருமாதமாக உறுப்பினர்களை சேர்த்து வருகிறோம். ஆரணி தொகுதியில் போட்டி போட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கானோர் சேர்ந்துள்ளனர். புதிய உறுப்பினர்களாகிய உங்கள் பணி கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது தான்.

குறிப்பாக ஆரணி சட்டமன்ற தொகுதி சாதனைகளை எடுத்து சொல்லுங்கள். ஆரணிக்கு கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. அதற்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டு திறப்பு விழா காண இருக்கிறோம். ஆரணி கல்வி மாவட்டமாக மாற்றப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்துள்ளோம். ஆரணி தொகுதியில் ரூ.47 கோடிக்கு தார்சாலைகள் மட்டும் போட்டுள்ளோம்.

கொளத்தூர், அம்மாபாளையம், காமக்கூர், விண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆரணி லாடப்பாடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கௌத்தூர். காமக்கூர்.எஸ்வி.நகரம். ஆரணி கைலாய நாதர் கோயில். தேவிகாபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கோயில்களுக்கு புதியதாக தேர் செய்யப்பட்டுள்ளது. ஆரணி மக்களின் பல ஆண்டு கனவு நிறைவேறும் வகையில் காவேரி குடிநீர் நவம்பர் மாத இறுதிக்குள் வரவுள்ளது.

ஆரணி மையப்பகுதியான சூரிய குளம் ரூ.6.5கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்து பூங்கா, நடைபாதை, சிறப்பு மின்விளக்கு அலங்காரம் அமைக்கப்பட உள்ளது. இப்படி ஆரணி அழகுமிகு ஆரணியாக தரம் உயர்த்தப்ட்டுள்ளது. இவ்வாறு ஆரணிக்கு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லுங்கள். வரும் தேர்தலில் கழகம் அறிவிக்கும் வேட்பாளரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

நகர செயலாளர் எ.அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், மாவட்ட அவைத்தலைவர் ஜோதிலிங்கம், நகர மாணவரணி செயலளர் கே.குமரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் எ.கே.பிரபு, 3-வது வார்டு பாரதி, காந்திநகர் விநாயகம், புங்கம்பாடி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.