சிறப்பு செய்திகள்

கட்டாயம் முகக்கவசம் அணிவீர் – தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு தொடர் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, வெளியில் செல்லும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலிக்காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்நோய்த் தொற்றுப் பரவல் தமிழகத்தில் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் கண்டறியப்பட்டவுடன், அம்மாவின் அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அன்றையதினமே மேற்கொள்ளப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக, மருந்துகள் கொள்முதல் செய்ய பணியாணையும், மருத்துவ உபகரணங்களான என்.95 முகக்கவசங்கள், மூன்று மடிப்பு முகக்கவசங்கள், முழு உடல் கவசங்கள் வாங்குவதற்கான பணிகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டன. மூத்த ஜஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 ஒருங்கிணைப்புக் குழுக்கள், மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டன.

தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதுவிதமான கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டிற்கு பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்டுள்ள 13 நபர்களுக்கும் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் உருமாறிய வைரஸ் தொற்று உள்ளதா எனக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும்.

இந்நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்கான ஒரே வழி முகக்கவசம் அணிவதுதான் என அரசால் வலியுறுத்திச் சொல்லப்பட்டு வருகிறது. இந்நோய்த் தொற்று குறைந்து வருவதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகிறார்கள். எனவே, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டுமென்று அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.

இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றும் முகக்கவசம் அணியாத காரணத்தால் தான் ஏற்படுகிறதென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றையெல்லாம் பொதுமக்கள் கவனமாக எடுத்துக்கொண்டு, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.