சிறப்பு செய்திகள்

கழக ஆட்சியில், தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் பீடுநடை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

கோவை

புரட்சித்தலைவி அம்மா வழியில் முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்துவதால் வளர்ச்சிப் பாதையில் தமிழகம் பீடுநடை போடுகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், நல்லூரில் பொள்ளாச்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ரூ.2.75கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.4.25கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 26,607 பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதல்வர் தமிழகத்தினை முன்னேற்றப்பாதையில் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். முதலமைச்சரின் சிறந்த செயல்பாட்டினை பாராட்டி இந்தியா டுடே வார இதழ் ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க முதன்மை மாநிலமாக இரண்டாவது முறையாக தமிழகத்தினை தேர்வு செய்துள்ளதே, இதற்கு சான்றாக விளங்குகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் அதிக அளவிலான குடிமராமத்து திட்டம் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பல்வேறு குளங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.
நூற்றாண்டு பழமையையும், பெருமையையும் கொண்டுள்ள பொள்ளாச்சி நகரைச் சுற்றியுள்ள கிராமங்கள், செழிப்பான விவசாய நிலங்களால் வேளாண்மை தற்சார்பு பொருளாதாரத்தை கொண்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தால் மிகப் பெரிய வளர்ச்சி பெற்று, தற்போது தென்னை சார் பொருட்கள் உற்பத்தியால் உலக வரைபடத்தில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுள்ளது.

தென்னை விவசாயிகளின் 50ஆண்டுகால கோரிக்கையான நீரா பானம் உற்பத்திக்கு தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கி தென்னை விவசாயிகளின் மனம் குளிரவைத்துள்ளார். பொதுமக்கள் எளிதாக அரசு நலத்திட்டங்களை பெறும் அரசு அலுவலகங்களுக்கு சென்று வர ஏதுவாக பொள்ளாச்சி வருவாய் வட்டத்தை பிரித்து ஆனைமலையை தலைமை இடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திருமண மண்டபம் கட்டுவதற்கு ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபம் 10,100 சதுரஅடி அளவில் 1000 நபர்கள் அமரும் வகையில் கட்டப்படவுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் 12,500 சங்க உறுப்பினர்கள் பயன்பெறுவார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணமான எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்களின் நலனை அறிந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

அதனைத்தொடர்ந்து இவ்விழாவில் 26,607 பயனாளிகளுக்கு ரூ.4.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இவ்விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வி.கிருஷ்ணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்/கூடுதல் பதிவாளர் இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.