தற்போதைய செய்திகள்

குருமலை ஊராட்சி கழுகாசலபுரத்தில் ரூ.25 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் குருமலை ஊராட்சி கழுகாசலபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் குருமலை ஊராட்சி கழுகாசலபுரத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக்கும் பணிகள் மற்றும் வனத்துறையின் மூலம் குருமலை முதல் அய்யனார்கோவில் வரை ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு தடுப்பணை அமைக்கும் பணிகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

குருமலை பகுதி மக்கள் வனப்பகுதியில் உள்ள அய்யனார் கோயிலுக்கு செல்ல சாலை அமைக்க வேண்டும் என்று பல காலமாக கோரிக்கை வைத்தனர். அதனையும் நிறைவேற்றுகின்ற வகையில் ரூ.10 லட்சம் செலவில் வனத்துறை மூலம் 1800 மீட்டர் தூரத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலை அமைக்கப்படும். குருமலை பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் நீலகண்டன் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, குருமலை ஊராட்சி தலைவர் விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.