சிறப்பு செய்திகள்

தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி – முதலமைச்சர் உத்தரவு

சென்னை

தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

கனமழை மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளப் பெருக்கினால், அங்குள்ள பெரும்பாலான சொத்துகளுக்கு மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியதோடு, பல உயிர்களை பலி வாங்கிவிட்டது.

உங்களுடைய தீவிர முயற்சி மற்றும் பேரிடரை விரைவான செயல்பாடுகளை கையாண்டதுடன், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மேலும் மீட்புப் பணியில் உங்களுடைய அரசின் சிறப்பான நடவடிக்கை ஆகியவற்றால் வெள்ளம் ஏற்படுத்திய மோசமான விளைவுகளை உடனடியாக எதிர்கொள்ள முடிந்தது.

மழையாலும், வெள்ளத்தாலும், உறவினர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலை, தமிழக அரசு சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் இந்த இக்கட்டான நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் ஆதரவு அளிக்கும் விதமாகவும், இந்த அவசியமான நேரத்தில் தமிழக அரசு மற்றும் மக்களுக்கும் தெலுங்கானா அரசு மற்றும் மக்களிடையே உள்ள ஒற்றுமையை தெரிவிக்கும் விதமாகவும், தெலுங்கானா மாநிலத்துக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 கோடி நிவாரண நிதியை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

நிவாரண உதவி பொருட்களாக பாய், போர்வை உள்ளிட்டவைகளை நாங்கள் அனுப்புகிறோம். தெலுங்கானா அரசுக்கு தேவைப்படும் வேறு உதவிகளையும் வழங்குவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.