தற்போதைய செய்திகள்

கூட்டுறவுத்துறை மூலம் நுகர்வோருக்கு தரமான வெங்காயம் விற்பனை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

சென்னை

நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தரமான வெங்காயம், கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தி, நுகர்வோர்களுக்கு, கூட்டுறவுத் துறையின் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்வது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வெங்காய விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்று. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்தது முதல் கடந்த 10 ஆண்டுகளில் விலை நிலை நிறுத்தும் நிதி மூலமாக வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் பொருட்டு வெங்காயம் அதிக விலைச்சல் உள்ள வெளிமாநிலங் களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு கூட்டுறவு அமைப்புகள் மூலம் விற்பனை செய்து விலையை கட்டுக்குள் வைத்துள்ளது.

இந்த ஆண்டும், வெங்காய விளைச்சல் அதிகம் உள்ள பகுதிகளான மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேசத்தில் பெய்துவரும் அதிக மழையின் காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைவானதால், விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்திட, முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் துறை உயர் அலுவலர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம் இன்று (21.10.2020) முதல் விற்பனை செய்யப்படும். நாளை (22.10.2020) முதல் தமிழ்நாட்டில் உள்ள இதர பகுதிகளில் வெங்காயம் கூட்டுறவுத்துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும்.

மேலும், வெங்காய விலையை தினசரி அடிப்படையில் அரசு கண்காணித்து வருகிறது. தேவை மற்றும் வரத்தின் அடிப்படையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தரமான வெங்காயம் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுமட்டுமன்றி கடந்த 10 ஆண்டுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்காணித்து, விலை நிறுத்தும் நிதியின் மூலம் விலையேற்றக் காலங்களில் விலை உயர்வை கட்டுப்படுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், சிறப்புப்பணி அலுவலர் முனைவர் க.ராஜேந்திரன் கூடுதல் பதிவாளர்கள் ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர், கு.ரவிக்குமார் எம்.முருகன் மற்றும் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.