தற்போதைய செய்திகள்

மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு மிக விரைவில் புதிய கட்டடம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை

மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு மிக விரைவில் புதிய கட்டடம் திறக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

முதலமைச்சரால் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்ட மதுரை மேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று முன்தினம் பொதுமக்கள் பயன்பாடடிற்காக திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் ஒரே ஆண்டில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி முதலமைச்சர் சரித்திரம் படைத்துள்ளார்.பொருளாதாரத்தில் பின் தங்கிய சாமானிய, ஏழை, எளிய மக்கள் தங்களால் சொந்தமாக நிலங்களை தனியார் வசமிருந்து வாங்க இயலாத நிலையில் வாழ்வாதாரத்திற்காக அரசு புறம்போக்கு நிலங்களில் அவர்கள் உருவாக்கிய குடியிருப்புகளை அமைத்திருக்கும் அவ்விடத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி வீட்டுமனைப் பட்டா வழங்குகிற ஒரே அரசு அம்மா அவர்களின் அரசுதான். மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பான முயற்சியினால் அதிக வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குகின்ற மாவட்டமாக மதுரை மாவட்டம் விளங்குகிறது. மேலூர் தொகுதியில் மட்டும் 1300 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

முதியோர் ஓய்வூதியம் ஏறத்தாழ 32 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் புதிதாக 3 லட்சம் பயனாளிகளுக்கு வழங்க 2 லட்சம் மனுக்கள் ஆய்வு நிலையிலும் உள்ளன. இத்திட்டத்திற்கு மட்டும் அம்மாவின் அரசு ஏறத்தாழ ரூ.4,300 கோடி ஒதுக்கியுள்ளது. சாமானியர்களை பாதுகாக்கின்ற அரசாக அம்மா அவர்களின் அரசு விளங்குகிறது. மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் மூலம் 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கின்ற தண்ணீரை சேமிப்பதற்காக முதலமைச்சர் செயல்படுத்திய குடிமராமத்து திட்டத்தின் மூலம் மேற்கொண்ட பணிகளினால் தற்போது அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியிருக்கிறது. வடகிழக்கு பருமழையை எதிர்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் தலைமையில் அனைத்து அலுவலர்களுடன் நடைபெற்றது. காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்படக்கூடிய 27 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள மண்டல குழுக்களைத் நியமித்து அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்.

மதுரை மாவட்டத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மிக விரைவில் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டடம் முதலமைச்சரின் பொற்கரங்களால் துவக்கி வைக்கப்பட இருக்கிறது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை 1.5 சதவிகிதமாக கட்டுக்குள் கொண்டு வந்து பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக மதுரை மாவட்டம் விளங்குகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சுமார் 200 பயனாளிகளுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் (எ) செல்வம், எஸ்.எஸ்.சரவணன், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.