தற்போதைய செய்திகள்

மாநிலத்தின் வளர்ச்சிக்கு புள்ளி இயல்துறை உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள்

சென்னை

நவீன முறையில் துல்லியமான விபரங்களை வழங்கி மாநிலத்தின் வளர்ச்சிக்கு புள்ளி இயல்துறை உதவி புரிய வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசின் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை சார்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் 3-வது உலக புள்ளி இயல் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

புள்ளி இயல் துறை தமிழக அரசு மற்றும் இந்திய அரசுக்கு பல்வேறு சமூக பொருளாதார காரணிகளை உரிய நேரத்தில் போதுமான மற்றும் நம்பகமான முறையில், தகவல்களை அளித்து, பொருத்தமான கொள்கை முடிவுகளை எடுக்கவும், அரசினுடைய நலத்திட்டங்களை மிகச்சீரிய முறையில் செயல்படுத்தவும் உதவுகிறது. உதாரணமாக பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் பயிர் அறுவடை பரிசோதனைகள், பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் அலுவலர்களால் மேற்பார்வையிடப்படுகிறது. இதன் அடிப்படையில், பயிர் விளைச்சல் விவரங்கள் கணிக்கப்பட்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் அடிப்படையிலேயே, தமிழகத்தில் 30.09.2020 வரை 49,62,760 விவசாயிகளுக்கு ரூ.8,915 கோடி அளவிற்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்பட்டு, பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு இழப்பீட்டை பெற்றுத்தருவதில் பெருந்துணை புரிந்தது நமது துறைதான். இதற்காக மத்திய அரசும், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும் அம்மா அவர்களின் அரசை பாராட்டியுள்ளனர். கடந்த, ஜூன் 29-ந் தேதி அன்று 14-வது தேசிய புள்ளி இயல் தினத்தின்போது கொண்டாடப்பட்ட தலைப்பான நிலையான நீட்டித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து சில கருத்துக்களை நான் தெரிவித்திட விரும்புகிறேன்.

2015-ம் ஆண்டு செப்டம்பர் 25 முதல் 27 வரை நியுயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இந்தியா உள்ளிட்ட 193 நாடுகள் இந்த உலகை 2030 ஆம் ஆண்டிற்குள் மாற்றி அமைப்பதற்காக நீட்டித்த வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்தும் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நீட்டித்த வளர்ச்சி இலக்குகளானது எய்துவதற்கு லட்சியம் நிறைந்த ஒரு முக்கியமான திட்டமாகும்.

அம்மா அவர்கள் கடந்த 2011 முதலே, விலையில்லா அரிசி திட்டத்தின் மூலம் பட்டினியில்லா நிலையை தமிழகம் எய்திடவும், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மூலம் பாலின சமத்துவத்தை எய்திடவும், நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குடிமராமத்து, 11 புதிய மருத்துவ கல்லூரிகள், 68 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கி, உயர் கல்விச் சேர்க்கையில் 49 சதவிகிதம் எய்தியது போன்றவற்றின் மூலமாக நல்வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான குடிநீர் போன்ற இலக்குகளை அடைய முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று இங்கே பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.சமூக பொருளாதார, ஊரக வளர்ச்சிக்கான, பல்வேறு திட்டங்களை உருவாக்கவும், வறுமை ஒழிப்பு, பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம்,

சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்கிடவும், பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையால் சேகரிக்கப்படும் துல்லியமான புள்ளி விவரங்கள் அடிப்படையாக திகழ்கின்றன. மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சி, நிதிக்கொள்கை, விலைவாசி, தொழில் உற்பத்தி, வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களின் வளர்ச்சி ஆகியவற்றை கணக்கிடுவதில் அரசுத் துறைகளின் துல்லியமான புள்ளி விவரங்கள், நம் நாட்டின், நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டமிடலுக்கும், சிறந்த நிர்வாகத்திற்கும், அடிப்படையாக உள்ளது என்பது

சிறப்பாகும். எனவே, பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையானது, அரசின் சிறந்த செயல்பாட்டிற்கான திட்டமிடுதல்
மற்றும் வழிகாட்டுதலுக்கு நவீன முறையில் துல்லியமான புள்ளி விவரங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இவ்விழாவில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், தகவல் தொழில்நுட்பத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தொழில் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம், வேளாண்மை துறையின் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் ஆணையர் அதுல் ஆனந்த், மற்றும் பல்வேறு துறையின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.