தற்போதைய செய்திகள்

பொதுமக்கள் மேம்பாட்டிற்காக அரசு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

திருப்பூர்

பொதுமக்கள் மேம்பாட்டிற்காக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி டி.வி. பட்டிணத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித்தலைவி அம்மாவின் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின்
தேவைகளை நிறைவேற்றும் வகையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் இந்த பகுதியில் நடைபெறுகிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மற்றும் பொதுமக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் விரைவாக நிறைவேற்றிட வேண்டுமெனவும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசு சார்பில் அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்றுக்கொண்டு எல்லா வளமும், எல்லா நலமும் பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இம்முகாமில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அமைச்சர் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் ராமசாமி நகர் கிருஷ்ணா திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.