தற்போதைய செய்திகள்

வெற்றிக்கனியை ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்போம் – திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் சபதம்

திருவள்ளூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றிபெற செய்து வெற்றிக்கனியைஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்போம் என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எலாவூர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் மு.க.சேகர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசியதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழக தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக சுயேச்சையாக யாரும் போட்டியிடக்கூடாது. அப்போது தான் உள்ளாட்சித்தேர்தலில் கழகம் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும், பேரூராட்சி தலைவராகவும் நகராட்சித் தலைவராகவும் கழகத்தினர் வெற்றிபெற முடியும்.

மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் கழகத்தினர் அரும்பாடுபட்டு கழக வேட்பாளரை வெற்றிபெற செய்தனர். அதேபோல் இப்பொழுது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கழகததின் தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். வெற்றிக்கனியை ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பேசினார்.