உணவுத்துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை
பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்துள்ள ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று உணவு அமைச்சரை அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. காலத்தே அனைத்தும் நடைபெற்று வருகிறது. கட்சியின் நலன், தொண்டர்களின் நலன். இவை இரண்டும் மிகவும் முக்கியமானது. இது பாதிக்காத வகையில் தான் எந்த ஒரு உடன்பாடும் இருக்கும். பா.ஜ.க.வுடன் ஒரு சுமூக முடிவு ஒருமித்த கருத்தாகத்தான் இருக்கும். எந்த இடம், எத்தனை சீட் என்பதை கட்சி முடிவு செய்யக்கூடிய விஷயம்.
தமிழகத்தில் மக்களின் அதிருப்தியை மிக வேகமாக சம்பாதித்து வைத்துள்ள கட்சி தி.மு.க. அம்மா அரசு செய்த சாதனைகளை மக்கள் இன்று நினைத்து பார்க்கிறார்கள். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் இன்றைக்கு தி.மு.க. காற்றில் பறக்கவிட்டு நிறைவேற்றாத ஒரு சூழ்நிலை.
இன்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டது போல பொங்கல் தொகுப்பு என்று ஒரு குப்பையை அளித்து அதில் 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்து, இதனை சிபிஜ விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் வழக்கு போட்டுள்ளோம்.
இதனை உறுதிபடுத்தும் வகையில் இன்றைக்கு தரக்கட்டுபாட்டு மேலாளரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள். எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டது போல மிளகு என்று சொல்லி பருத்திக்கொட்டை, வெல்லத்தில் உருகிய வெல்லம், உடைக்க முடியாத வெல்லம், புளியில் பல்லி, மஞ்சள் தூளில் கலப்படம், கரும்பை 30 ரூபாய் என்று சொல்லி விட்டு பத்து ரூபாய்க்கு கரும்பு வாங்கி கொடுத்துள்ளனர்.
கிட்டதட்ட 600 ரூபாய்க்கு குடும்பத்தலைவரின் தலையில் கணக்கு எழுதிவிட்டு, 250 மதிப்புள்ள பொருள்களை அளித்துள்ளார்கள் என்றால், கிட்டதட்ட இதில் மட்டுமே தில்லுமுல்லு தி.மு.க அரசு ரூ.500 கோடிக்கு ஊழல் செய்துள்ளது என்றால், இதனை சிபிஐ விசாரித்தால் கண்டிப்பாக மாட்டுவார்கள்.
நாங்கள் சொல்ல வருவது, ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிட்டது போல பெருமளவு ஊழல் நடந்துள்ள நிலையில், தரக்கட்டுப்பாடு இது சரியில்லை என்று சான்று அளித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட உணவு அமைச்சர் முழுமையாக தார்மீக அடிப்படையில் பதவியை ராஜினாமா செய்வது தான் ஒரு ஆரோக்கியமான விஷயம். ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
சிபிஐ விசாரித்தால் அமைச்சர் மாட்டுவார். முதலமைச்சரும் மாட்டுவார். இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இதில் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் அவர்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறார்கள். இதில் எங்கள் கருத்து எதுவும் இல்லை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.