தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை
8 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் தான் அதிகம் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது என்று குற்றம்சாட்டி உள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி :- கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ஜ.க. வெளியேறியதாக கூறப்படுகிறதே.
பதில் :- ஒவ்வொரு கட்சியும் அவரவர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என்று விருப்பப்படுவார்கள், அது அனைத்து கட்சிகளிலும் அப்படித்தான் இருக்கும். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட அளவு தான் சீட் கொடுக்க முடியும்.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரைக்கும் எல்லா கட்சி தொண்டர்களும் போட்டியிடுவதற்கு விருப்பப்படுவார்கள். அதனால் அனைவருக்கும் நிவர்த்தி செய்வது இயலாத காரியம். தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிக்கும் இந்த சிரமம் உள்ளது, அந்த சிரமம் இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.
கேள்வி :- கூட்டணி முறிவு ஏற்பட வில்லை, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே
பதில் :- இது உள்ளாட்சி தேர்தல், மாநிலத்திற்குள் நடைபெறுகிற தேர்தல், இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் அந்தந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் அந்தந்த பகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் எண்ணத்தை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் இந்த முடிவு எடுத்திருக்கிறோம்.
கேள்வி :- பா.ஜ.க. வெளியேறியதால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்
பதில் :- பா.ஜ.க. வெளியேறியதாக தவறான வார்த்தையை பயன்படுத்தாதீர்கள், அந்தந்த கட்சியை சார்ந்தவர்கள் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறார்கள். அந்த அடிப்படையில் அந்தந்த கட்சி முடிவெடுக்கிறது. கழகத்தை சேர்ந்தவர்கள் 60 கோட்டங்களிலும் போட்டியிட விருப்பப்பட்டார்கள், அவர்களுடைய விருப்பத்தை நிறைவு செய்வது எங்களுடைய கடமை, அது மாதிரி ஒவ்வொரு கட்சியினுடைய கடமை.
கேள்வி :- தேசிய அரசியலில் இணைந்து செயல்படுகிறீர்களா
பதில் :- தேசிய அரசியலில் நாட்டினுடைய நலன்கருதி கழகம் இணைந்து செயல்படும், அப்பொழுதுதான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். எல்லாமே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் கட்சியில் இருக்கிறோம். ஆனால் அதற்கு தேவையான உதவிகளை தேசிய கட்சிகளுடன் இருந்தால்தான் பெற முடியும்
கேள்வி :- திடீரென்று உள்ளாட்சித் தேர்தலில் வெளியேறுவது
பதில் :- திடீர் என்றெல்லாம் கிடையாது, எங்கள் குழந்தை எங்களுக்கு முக்கியம், அவரவரது குழந்தை நன்றாக வளர்க்க வேண்டுமென்று எல்லோரது பெற்றோரும் விரும்புவார்கள். அதேபோல் அவர் அவருடைய கட்சி தலைவர்களும் தங்களுடைய குழந்தைகளை பார்ப்பார்கள். எப்படி குழந்தையை பேணி காப்போமோ, அவரவர்களுடைய கட்சி தலைவருடைய கடமை, அந்தக் கடமையை நாங்கள் செய்கிறோம்.
கேள்வி :- நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வை விமர்சித்துப் பேசியுள்ளாரே
பதில் :- அவர் வருத்தம் தெரிவித்து விட்டார், தவறு செய்யாத மனிதரே கிடையாது, ஆனால் தவறு செய்த பின்னர் அதை எண்ணி வருத்தம் தெரிவித்தால் அதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையிலேயே மனப்பக்குவம் இருக்க வேண்டும், அந்த மனப்பக்குவம் எங்களுக்கு இருக்குது.
கேள்வி :- தேர்தல் பிரச்சாரம் எதை முன்னிட்டு உள்ளது
பதில் :- தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரைக்கும் தி.மு.க. 8 மாத கால ஆட்சியில் நிறைய செய்தோம் என்று சொல்கிறார்கள், என்ன செய்தோம் என்று நாட்டு மக்களுக்கு தெரியவில்லை, ஊடகத்திலோ, பத்திரிகைகளோ தெரிவித்துள்ளார்களா, 8 மாத காலத்திலே மக்கள் பட்ட துன்பம் தான் அதிகம்.
தி.மு.க. தலைவரும். முதலமைச்சருமான ஸ்டாலின் அவரையே அவர் புகழ்ந்து கொள்கிறார். இந்தியாவிலேயே நான் தான் சூப்பர் முதலமைச்சர், நான் தான் இந்தியாவிலேயே இருக்கின்ற முதலமைச்சர்களுக்கெல்லாம் முதன்மை முதலமைச்சர் அப்படி என்று அவரைப் புகழ்ந்து கொள்கிறார்.
ஆனால் என்ன செய்தோம் என்று இதுவரைக்கும் சொல்லவே மாட்டேங்கிறார். தினந்தோறும் காலையில் எழுந்து கிறார், 3, 4 இடங்களை பார்க்கிறார், டீக்கடைகளில் டீ சாப்பிடுகிறார், நடை பயணம் செய்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார் பின் வீட்டில் போய் ஓய்வு எடுக்கிறார். இதைதான் செய்கிறார், நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்தார். இன்றைக்கு கொரோன வைரஸ் ஜெட் வேகத்தில் பரவுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சரே தெரிவிக்கிறார். நான் சொல்லவில்லை அவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதை கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதுவே அம்மாவுடைய அரசு, கொரோனா வைரஸ் பரவல் ஆரம்ப கால கட்டம், அந்த நோய் எப்படி வரும், அதனுடைய அறிகுறி தெரியாமல் இருந்த காலகட்டத்திலேயே, அந்த நோய் பரவுவதற்கு தடுப்பதற்கு மருத்துவர்களுக்கும் தெரியாது. படிப்படியாக தெரிந்துதான் இந்த நோய் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தோம். அப்படிப்பட்ட காலகட்டத்தில் கடும் முயற்சி எடுத்து உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முழுமையாக குணமடைய செய்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம், அதுமட்டுமல்ல மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, ஆக்சிஜன் வசதி, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் அனைத்தும் சிறப்பான முறையில் கொள்முதல் செய்து சிகிச்சை அளித்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
நாங்கள் அதை செயல்படுத்தினோம், திமுக அதை முழுமையாக செயல்படுத்த வில்லை. அதுமட்டுமில்லாமல் கணக்கை குறைத்துக் காண்பிக்கிறார்கள். கர்நாடகாவில் கணக்கை அதிகமாக காண்பிக்கிறார்கள். கேரளாவில் உண்மையாக காண்பிக்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டதை குறைவாக காண்பிக்கிறார்கள்
கேள்வி:- கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏன் தமிழக அரசு குறைத்து காண்பிக்கிறது
பதில்:- வேண்டுமென மக்களிடம் தவறான கருத்து சொல்கின்றனர்.
எங்கள் குடும்பத்தில் மட்டும் 18 பேர் பாதிக்கப்பட்டனர் கட்சி நிர்வாகி வீட்டில் 12 பேரில் 7 பேருக்கு கொரோனா வந்துள்ளது. கொத்துக்கொத்தாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர இருக்கிறார்கள் ஆனால் கணக்கு மட்டும் குறைத்துக் காண்பிக்கிறார்கள்
கேள்வி :- இந்த சமயத்தில் நாளை பள்ளிகள் திறக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதே
பதில் :- மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் தெரியும், மக்கள் ஒரு அச்ச உணர்வோடு உள்ளனர். கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நான் சொன்ன வழிமுறைகளை அவர்கள் கடைபிடிக்கவில்லை. வீடு, வீடாக கண்டறிந்து நோய்த்தொற்று இருப்பவர்களை மருத்துவ உதவி செய்ய வேண்டும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
கேள்வி :- மெகா கேம்ப் மூலம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதே
பதில்:- தடுப்பூசி போட்டால் நோய் பரவல் தாக்கம் இருக்காது ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒருநாள் வைரஸ் வராது என்று கிடையாது ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் இதுவும் தடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை, 8 மாத கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு அதிகமாக உள்ளது. தினந்தோறும் பத்திரிகை, ஊடக செய்திகள் மூலம் தெரிகிறது. எட்டு மாத கால தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.
அதேபோல் கழகத்தினர் மீது பொய் வழக்கு அதிகமாக போடுகிறார்கள். அதை சமூக வலைதளங்களில் எங்களுடைய தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் பதிவேற்றம் செய்தால் அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இது ஒரு சர்வாதிகார ஆட்சியாக இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தங்கள் கருத்துக்களை ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது அதை இந்த அரசாங்கம் பறித்து கொண்டிருக்கிறது
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.