தற்போதைய செய்திகள்

கோவையில் மனித கழிவுகளை அகற்ற நவீன ரோபோக்கள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை,

கோவையில் மனித கழிவுகளை அகற்ற நவீன ரோபோக்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இயக்கி துவக்கி வைத்தார்.

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியில் நிகழும் மரணங்களை தடுக்க 2013-ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் மனித கழிவுகளை நீக்க மனிதர்கள் பணியமர்த்த தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் இச்சட்டத்திற்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டு கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அங்கமாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலமாக ரோபோடிக் இயந்திரங்கள் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று, பாதாள சாக்கடை மற்றும் கழிவு அடைத்தலை நீக்க, மனிதர்களே இறங்கி எடுக்கும் தொழில். இதில் மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நாடு முழுவதும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் ஏற்பட்ட பிரச்சனைகள் பல. அறிவை பயன்படுத்தினால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்பதற்கு சான்றாக Bandikoot v2.0 விளங்குகிறது.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலின்படி கோயம்புத்தூர் மாநகராட்சி எப்போதுமே தூய்மைப் பணியாளர் நலனுக்காக பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை வேலையை எளிதாக்க நடைமுறைப்படுத்தி வருகிறது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100சதவீதம் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும், நமது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றி ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ரோபாடிக் 2.0 என்ற நவீன கருவியை அறிமுகப்படுத்தி சிறந்த முறையில் பணி செய்யப்பட்டு வருகிறது.

குளத்தின் உள்ளே இரண்டு இடங்களில் சூரிய ஒளி செயற்கை வழி நீருற்று, 2 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 7 இடங்களில் பாதுகாவலர் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து முடியும் போது மேலைநாடுகள் போல் கண்கவர் பகுதிகளாக நமது மாநகரப்பகுதிகளும் மாற்றம் பெறும். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 89 வார்டு பகுதிகளில் தியாகராஜா நகர் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள நியாய விலைக் கடைக்கு பூமி பூஜையும், வாய்கால்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.85.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், சுண்டாக்கமுத்தூர் பள்ளிக்கூட வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை என மொத்தம் 101.6 லட்சம் மதிப்பில் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, மாவட்ட வருவாய் அலுவலர் டி.ராமதுரை முருகன் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.